Published : 20 Mar 2023 08:03 PM
Last Updated : 20 Mar 2023 08:03 PM

“சமூக நீதிக்கான அரசு என்பது மீண்டும் நிரூபணம். எனினும்...” - வேல்முருகன் | தமிழ்நாடு பட்ஜெட் 2023 கருத்து

சென்னை: ''மகளிர் உரிமை, கல்வி, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது'' என்று தமிழ்நாடு பட்ஜெட் 2023 குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கருத்து தெரிவித்துள்ளார். எனினும், பழைய ஓய்வூதிய திட்டம், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெறாததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு சமூகப் பார்வையோடு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கான பாதையில் தொடர்வதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் பாராட்டுகிறேன், வரவேற்கிறேன். தாய் தமிழைக் காக்க இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசன் ஆகியோரின் பங்களிப்பைப் போற்றும் வகையில், சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது வரவேற்தக்கது. அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைப் பரப்புவதற்காக, அவரது படைப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்படும் என்றும் இதற்காக அரசால் 5 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருப்பது போற்றத்தக்கது.

நாட்டுப்புற கலைகளையும், கலைஞர்களையும் பேணி காக்க, தமிழ்நாடு முழுவதும் 25 பகுதி நேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகாண்ட சோழர்களின் பங்களிப்பை போற்றவும், அக்கால கலைப்பொருட்கள், நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்கவும், தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதாக கூறப்பட்டிருப்பது, சோழர்கள் மீது விமர்சனம் வைக்கும் அரைகுறையான ஆய்வாளர்கள் முழுமையாக புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமய மற்றும் அறநிலையத்துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்பது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சமூக நீதிக்கான அரசு என்பதை மீண்டும் மெய்ப்பித்திருக்கிறது.

பாதாள சாக்கடைகளையும், கழிவுநீர் தொட்டிகளையும் மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறையை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து எதிர்த்து வருவதோடு, தூய்மை பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்ள, நவீன இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதே திட்டம் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையிலும் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், வரும் நிதியாண்டில், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் என மொத்தம் ரூ.1500 கோடி செலவில் பணிகள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் பயனளிக்கக்கூடியவை ஆகும்.

குறிப்பாக, மகளிர் நலன், மாணவர் நலன், கல்வித் திட்டங்கள் போன்றவற்றிற்கும் சிறப்பான வகையில் நிதி ஒதுக்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மூன்றும் நாட்டின் முக்கிய தேவைகள். இதற்காக, தமிழ்நாடு அரசுக்கும், முதல்வர் அவர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது.

அதே நேரத்தில், பழைய ஓய்வூதிய திட்டம், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது, கரோனா காலங்களில் மருத்துவ சேவையாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது போன்ற அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. எதிர்வரும் காலத்தில் முதல்வர் அவர்கள் விதி எண் 110 கீழ் இந்த மூன்று கோரிக்கைகள் உள்ளிட்ட தமிழக மக்களின் முக்கியமான பிரச்சனைகளை நிறைவேற்றுவார் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி கருதுகிறது'' என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார். வாசிக்க > தமிழ்நாடு பட்ஜெட் 2023 சிறப்பு அம்சங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x