

திண்டுக்கல்: “குடும்பத்தில் பெண்கள் உழைப்பிற்கான அரசின் முதல் அங்கீகாரமாக ரூ.1000 வழங்குவதை வரவேற்கிறேன்” என்று முன்னாள் எம்.எல்.ஏ. கே.பாலபாரதி தெரிவித்தார்.
இது குறித்து திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., கே.பாலபாரதி கூறும்போது, “வீட்டில் பல வேலைகளை பெண்கள் செய்கின்றனர். இந்த வேலைகளுக்கு ஒரு மதிப்பு இல்லாமல் பெண்களின் கடமையாகவே பார்க்கப்பட்டது. பெண்களின் உழைப்பை அங்கீகரித்து, பெண்களின் கடமையாக பார்க்காமல் பெண்களின் உழைப்பிற்கு ஒரு மதிப்பாக அரசு தரப்பில் முதன்முறையாக ரூ.1000 அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
இதை உரிமைத்தொகை என்கின்றனர். இது பெண்களின் உரிமைக்கான மதிப்பீட்டுத் தொகை தான். இது இலவசமாக கருதக் கூடாது. இது நல்ல நடவடிக்கை. தகுதிகள், விதிகள் குறித்து அறிவிக்கும்போது கருத்து சொல்லலாம். இந்தத் திட்டம் வரவேற்ககூடிய புதுமையான மாநில அரசால் உருவாக்கப்பட்ட ஒரு நல்ல திட்டம். இதுவரைக்குமான அரசமைப்பில் இந்தத் திட்டம் ஒரு பெரும் மாறுதல். இதை தேர்தல் வாக்குறுதி என சொல்லப்பட்டாலும், பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கும் உண்மையான பொருள் இதில் அடங்கியுள்ளது. தமிழ்நாடு முதல்வர், நிதியமைச்சர் ஆகியோருக்கு நன்றியும், வாழ்த்துகளும்” என்றார். வாசிக்க > தமிழ்நாடு பட்ஜெட் 2023 சிறப்பு அம்சங்கள்