

மதுரை: தமிழக பட்ஜெட்டில் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.8,500 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுரை மாநகரில் போக்குவரத்து நெருடிக்கடிக்கு தீர்வு கிடைக்கும் என வர்த்தகம் மற்றும் ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இரு வழித்தடங்களில் 54 கி.மீ., தொலைவிற்கு மெட்ரோ ரயில் செயல்படுகிறது. இதற்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு உள்ளது. தீராத போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க, மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வர்த்தக சங்கம் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். தமிழக அரசும் இதில் ஆர்வம் காட்டியது. மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்திய கூறுகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு செய்தது. இதற்கான அறிக்கையை அந்நிறுவனம் தமிழக அரசிடம் வழங்கிய நிலையில், அரசின் அறிவுறுத்தலின் பேரில், முதல்கட்டமாக 18 நிறுத்தங்களுடன் சுமார் 31 கி.மீ., தூரத்திற்கான மெட்ரோ வழித்தடம் குறித்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, திருமங்கலம் - ஒத்தக்கடை இடையே கப்பலூர், தருமத்துப்பட்டி, தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பசுமலை, வசந்தநகர், மதுரைக் கல்லூரி, தெற்குவாசல், காளவாசல், சிம்மக்கல், மதுரை ரயில் நிலையம், கோரிப்பாளையம், அழகர்கோயில் சாலையிலுள்ள காவல் ஆணையர் அலுவலகம், கே.புதூர், மாட்டுத் தாவணி, உத்தங்குடி, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை ஆகிய இடங்களில் நிறுத்தம் செய்ய வழிவகை செய்யப்படுகிறது. இவ்விடங்களில் பயணிக்கான சிறியளவில் ஸ்டேஷன்களும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கையில் மதுரைக்கான முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கென ரூ. 8,500 கோடி நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் அமல்படுத்தும் நிலையில், மாநகரில் வாகன போக்குவரத்து நெருக்கடி ஓரளவுக்கு தீர்வு கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கட்டிட தொழிலாளர்கள், வர்த்தகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைத்து தரப்பினரும் பயன்பெறுவர் என, வர்த்தகர்கள், வாகன ஓட்டிகள், மக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் கூறியது: ''இத்திட்டத்திற்கு ஆரம்ப முதல் குரல் கொடுத்தோம். சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வந்தபோது, நாங்கள் கொடுத்த கோரிக்கைகளில் முதல் கோரிக்கையே மதுரைக்கான மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்கவேண்டும் என வலியுறுத்தினோம். இதன்படி, பட்ஜெட்டில் ரூ.8,500 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை வரவேற்கிறோம்.
இத்திட்டத்தின்படி, ஒத்தக்கடை - தல்லாகுளம் வரை மேம்பாலம், தல்லாகுளம் - வசந்தநகர் வரை ரோடு மார்க்கமாகவும், வைகை ஆற்றை கடக்க, ரோடு மட்டத்தில் இருந்து 50 மீட்டர் கீழ் பாலமும் அமைக்கப்படுகிறது. வசந்தநகர் - திருமங்கலம் வரையிலும் சுமார் 23 கி.மீ., வழித்தடம் பாலம் அமைக்கப்பட்டு அதன்வழியாக ரயில் இயக்கப்படுகிறது. சுமார் 18 மாதத்தில் பணி முடியும் என கூறுகின்றனர். இத்திட்டம் மூலம் மதுரையில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும். கட்டுமான தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட பல தரப்பி னரும் பயன் பெறுவர். அடுத்த இரு கட்ட மெட்ரோ ரயில் திட்டமும் அமல்படுத்த வேண்டும்'' என்றார்.
தென்னக ரயில் பயணிகள் சங்க பொதுச்செயலர் பத்மநாதன் கூறியது: ''நீண்ட நாள் கோரிக்கையான திருமங்கலம் - ஒத்தக்கடைக்கு 18 நிறுத்தங்களுடன் கூடிய ரயில் திட்டம் மூலம் மதுரை மக்கள் மிகவும் பயன்பெறுவர். லட்சக்கணக்கானோர் பயணிக்க வாய்ப்புள்ளது. பயண நேரம், செலவு குறையும். மாற்றுத்திறனாளி, முதியோர் மற்றும் அதிகமாக பயன்படுத்தும் தொழிலாளர்கள், மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்கவேண்டும். வளரும் மதுரை நகருக்கு இது போன்ற திட்டம் அவசியம். விரைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்'' என்றார். | வாசிக்க > தமிழ்நாடு பட்ஜெட் 2023 சிறப்பு அம்சங்கள்