

புதுச்சேரி: புதுச்சேரியில் ரெஸ்டோ பார்கள் இன்னும் வரும், அரசு மது பார்களை ஏலம் விட முடிவு எடுத்துள்ளோம் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:
சம்பத் (திமுக): "பாப்ஸ்கோ வசம் உள்ள மதுக் கடைகளை ஏலம் விடும் எண்ணம் அரசுக்கு உள்ளதா? இங்கு பணிபுரிந்த தொழிலாளர்களை கருத்தில் கொண்டு மாற்றுப்பணி வழங்க அரசு முன்வருமா? நிலுவை சம்பளம் வழங்கப்படுமா?"
அமைச்சர் சாய் சரவணக்குமார்: "பாப்ஸ்கோ மதுக் கடைகளை ஏலம் விடும் எண்ணம் அரசுக்கு உள்ளது. பாப்ஸ்கோ மறுசீரமைப்புக்கு பிறகு அங்கு பணி புரிந்தவர்களின் பிரச்சினை பற்றி முடிவு செய்யப்படும். மதுக்கடைகளை ஏலம் விடுவது தொடர்பாக உயர்மட்ட குழு உள்ளது. இந்த குழு கூடி முடிவுகளை எடுக்கும்."
சம்பத் (திமுக): "பாப்ஸ்கோ மதுக்கடைகளில் பள்ளியளவில் படித்தவர்கள் வேலைபார்த்துள்ளனர். இன்று அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்."
முதல்வர் ரங்கசாமி: "எம்எல்ஏக்கள் ஏதேனும் ஆலோசனை கூறுங்கள், அதைப்பற்றி யோசிக்கலாம்."
எதிர்க்கட்சித் தலைவர் சிவா: "பாப்ஸ்கோ மதுபான கடைகள் தொடர்பாக கடந்த காலத்தில் தான் சில பிரச்சினை இருந்தது. இப்போதுதான் அந்த பிரச்சினையெல்லாம் இல்லையே? உயர்மட்ட குழு என சொல்கிறீர்களே, அவர்கள் வெளிநாட்டில் இருந்தா வரப்போகிறார்கள்? இன்றே கூட்டி முடிவு செய்யுங்கள். இதுவரை 350 ரெஸ்டோ பார்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மதுபான உரிமத்தின் மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது."
முதல்வர் ரங்கசாமி: "ரெஸ்டோ பார்கள் இன்னும் வரும். அதுமட்டுமில்லாமல் மதுபான கடைகள் எப்எல் 1, எப்எல் 2 தொடர்பாகவும் முடிவு எடுக்கப்போகிறோம். அரசின் மதுபார்கள் ரு.150 கோடிக்கு ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனங்களை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மதுபான கடை, பெட்ரோல் பங்க் வழங்கினோம். பாப்ஸ்கோவுக்கு 37 பார் கொடுத்தோம். அதன் மூலம் அரசுக்கு லாபம் தந்திருக்க வேண்டும். ஒரு பார் வைத்திருக்கும் தனியார் வசதியாக வாழ்கின்றனர்."
எதிர்க்கட்சித் தலைவர் சிவா: "நாலு தெருக்கு ஒரு ரெஸ்டோ பார், 10 வீட்டுக்கு ஒரு ரெஸ்டோ பார் என கொடுத்து வருகிறீர்கள். இன்னும் கொஞ்ச நாளில் இது முழுமையடைந்து விடும். அரசு மதுக் கடைகள் நஷ்டமாக யார் பொறுப்பு?"
முதல்வர் ரங்கசாமி: "அரசு மது பார்கள் நஷ்டமடைய பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் கூட்டு பொறுப்பு உள்ளது. ஒரு வகையில் இது பொறுப்பற்றதனம் என கூறலாம். மக்கள் வரிப்பணத்தை எவ்வளவுதான் கொடுக்க முடியும்?"