

புதுச்சேரி: ஏஎப்டி, சுதேசி, பாரதி மில்களை மீண்டும் திறக்க முடியாது. மக்கள் வரிப்பணத்தை எவ்வளவுதான் செலவிடுவது என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம் வருமாறு:
சிவசங்கர் (பாஜக ஆதரவு சுயே): "புதுச்சேரி மாநிலத்தின் அதிக வேலை வாய்ப்புகளை வழங்க 3 பஞ்சாலைகள், 2 நுாற்பாலைகள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை சீரமைத்து நடத்த வல்லுநர் குழு அமைக்கப்படுமா? தனியார் பங்களிப்புடன் ஆலைகளை தொடங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?" என கேள்வி எழுப்பினார்.
முதல்வர் ரங்கசாமி: "ஏஎப்டி, சுதேசி, பாரதி மில்களை திறப்பதற்கு சாத்தியக் கூறுகளே இல்லை. புதுச்சேரி கூட்டுறவு நுாற்பாலை, காரைக்கால் ஜெயபிரகாஷ் நாராயணன் கூட்டுறவு நுாற்பாலைகளை சீரமைக்க அமைக்கப்பட்ட நிபுணர் குழு சில பரிந்துரைகளை அளித்துள்ளது. புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனக் கூறினார்.
சிவசங்கர்: "புதுச்சேரியில் படித்த இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த ஆலைகளைத் திறக்க வேண்டும்" எனக் கூறினார்.
முதல்வர் ரங்கசாமி: "ஏஎப்டி, சுதேசி, பாரதி பஞ்சாலைகளை மீண்டும் திறக்க முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை. மில்லின் லட்சணம் அனைவருக்கும் தெரியும். மக்கள் வரிப்பணத்தை எவ்வளவுதான் செலவு செய்வது? தொழிலாளர் சட்டப்படி அங்குள்ள ஊழியர்கள், அதிகாரிகள், தொழிலாளர்களுக்கு உரிய நிலுவைத் தொகை தர முடிவு செய்துள்ளோம். இன்றைய நிலையை கருத்தில் கொண்டு சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களுக்கு அந்த இடத்தை பயன்படுத்தலாம்.
சுதேசி, பாரதி மில் நிலத்தை தேசிய பஞ்சாலை கழகத்திடம் இருந்து விலை கொடுத்து வாங்க வேண்டும். முதல் தவணை மட்டும்தான் கொடுத்துள்ளோம். நிலத்தை வாங்கிய பிறகு அரசு ஆலோசித்து உரிய முடிவு எடுக்கும். கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தி செய்ய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முன்வந்துள்ளது" எனக் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சிவா: "மில்கள் தொடர்பாக அரசு ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டும். நீங்கள் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடியப் போகிறது. இப்பவே ஒரு கமிட்டி அமைத்து, அடுத்த ஆண்டிற்குள்ளாவது முடிவு செய்யுங்கள் என வேண்டுகோள் வைக்கிறேன். சர்க்கரை ஆலையை உடன் இயக்க நடவடிக்கை எடுக்கலாம்" எனக் கூறினார்.
அனிபால் கென்னடி (திமுக): "பஞ்சாலைகளை மூடிவிட்டால் என்னவாவது" என வினவினார்.
முதல்வர் ரங்கசாமி: "நிதியை ஒதுக்கினால் உள்ளே வந்து வேலை செய்கிறார்களா? பணத்தை எப்படி தந்தால் திறந்து நடத்தி பார்த்த பிறகுதான் இம்முடிவு. தீம் பார்க் அமைக்கலமா? என்ற எண்ணமும் உள்ளது. இது தொடர்பாக அரசு விரைவில் முடிவெடுக்கும்" எனக் கூறினார்.