மின் துறையை தனியார்மயமாக்க எதிர்ப்பு: புதுச்சேரி பேரவையில் இருந்து திமுக, காங். வெளிநடப்பு

மின் துறையை தனியார்மயமாக்க எதிர்ப்பு: புதுச்சேரி பேரவையில் இருந்து திமுக, காங். வெளிநடப்பு
Updated on
1 min read

புதுச்சேரி: மின் துறையை தனியார் மயமாக்குவது தான் அரசின் கொள்கை முடிவு என்று மின் துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்ததை அடுத்து, அம்மாநில சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இது தொடர்பாக பேரவையில் நடந்த விவாதம்:

எதிர்க்கட்சித் தலைவர் சிவா: “புதுச்சேரி அரசின் மின் துறைக்கு சொந்தமான இடங்கள், மின் சாதனங்கள், தளவாடப் பொருட்களின் மொத்த மதிப்பு எவ்வளவு பாலிசிதாரர்களிடம் பெறப்பட்ட வைப்பு நிதி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதா? மின்துறைக்கு அரசு துறைகள், தொழிற்சாலைகள், வீட்டு உபயோகச் சந்தாதாரர்களிடம் நிலுவையிலுள்ள மின் கட்டண பாக்கி எவ்வளவு?”

மின்துறை அமைச்சர் நமச்சிவாயம்: "மின் துறையின் நிகர சொத்தின் மதிப்பு, தேய்மானம் போக சுமார் ரூ.551 கோடி. பாலிசி வைப்பு நிதி டெபாசிட் செய்யப்படவில்லை. மின் கட்டண பாக்கி ரூ.536.7 கோடியாக உள்ளது."

எதிர்க்கட்சித் தலைவர் சிவா: “மின் துறையை தனியார் மயமாக்கிவிட்டீர்களா?”

அமைச்சர் நமச்சிவாயம்: “இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. மின் துறையை தனியார் மயமாக்குவதுதான் அரசின் கொள்கை முடிவு. எல்லா மாநிலங்களிலும் செய்து வருகிறார்கள்.”

எதிர்க்கட்சித் தலைவர் சிவா: “பாஜக ஆளும் மாநிலங்களில் செய்துவிட்டார்களா? முதல்வரின் நிலைப்பாடு என்ன? மின் துறை தனியார் அரசின் கொள்கை முடிவு என்பதை எதிர்த்தும், கண்டித்தும் வெளிநடப்பு செய்கிறோம்." அதைத்தொடர்ந்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in