Published : 20 Mar 2023 01:01 PM
Last Updated : 20 Mar 2023 01:01 PM

தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு செப்.15 முதல் ரூ.1000 உரிமைத் தொகை: தமிழ்நாடு பட்ஜெட் 2023-ல் அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: வரும் செப்டம்பர் 15 முதல் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது என்று பட்ஜெட்டில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இது, திமுக அரசின் 2-வது முழுமையான பட்ஜெட். 2023-24-ம் நிதி ஆண்டுக்கான இந்த பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து, பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக அவர் பட்ஜெட் உரையில் இடம்பெற்ற விவரம்: "மகளிருக்கு சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடும் அளித்தது முதல், இன்று அவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம்.

அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று நாங்கள் தேர்தல் அறிக்கையில், வாக்குறுதி அளித்துள்ளோம். மக்களைத் தேடி மருத்துவம், புதுமைப்பெண், நான் முதல்வன் போன்றவை தேர்தல் அறிக்கையில் செல்லப்படாதவை. இத்தகைய புதுமையான திட்டங்களை செயல்படுத்தியுள்ள முதல்வர், மகளிருக்கு உரிமைத் தொகை தரப்படும் என்ற இந்த வாக்குறுதியையும் நிறைவேற்றிட வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். அதன் அடிப்படையில், தகுதிவாயந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட இருக்கிறது.

மத்திய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும். சிறப்புமிக்க இந்த திட்டம் கலைஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15-ம் நாள் முதல் இத்திட்டம் முதல்வரால் தொடங்கிவைக்கப்பட இருக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாடு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் 7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார். | வாசிக்க > தமிழ்நாடு பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x