சமூக நீதியை இலக்குகளாகக் கொண்ட திட்டங்களில் குறிப்பிடத்கக்க முன்னேற்றம்: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
Updated on
1 min read

சென்னை: "சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியையும் இலக்குகளாகக் கொண்டு அனைத்து நலத்திட்டங்களும் வகுக்கப்பட்டன. இத்திட்டங்களின் அடிப்படையில், இந்தாண்டு நாங்கள் எய்த விரும்பிய இலக்குகளில், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளோம்" என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசின் 2வது முழுமையான பட்ஜெட். 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார்.

அவரது உரையில், "கடந்தாண்டு, வரவு செலவு திட்டத்தில் நிதி மற்றும் நிர்வாக நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியையும் இலக்குகளாகக் கொண்டு அனைத்து நலத்திட்டங்களும் வகுக்கப்பட்டன. இத்திட்டங்களின் அடிப்படையில், இந்தாண்டு நாங்கள் எய்த விரும்பிய இலக்குகளில், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து தளங்களிலும் சமூகநீதியை உறுதி செய்வதற்கான தொலைநோக்குப் பார்வை கொண்ட இந்த திராவிட மாடல் ஆட்சிமுறை, நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் முன்னோடிகள் காட்டிய வழியில் வெற்றிநடை போட்டுவருகிறது.

சமூக நீதி, பெண்களுக்கு சம உரிமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, பகுத்தறிவு ஆகிய 4 அடிப்படைத் தத்துவங்களைக் கொண்டு நாட்டிற்கே கலங்கரை விளக்கமாக நம் மாநிலம் திகழ்ந்து வருகிறது.

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி நிர்வாகத்தில் சிறப்பான சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு மக்களின் நலன் காத்திட முடிந்தது. இந்த அடிப்படையில் கடந்த வரவு செலவு திட்டத்தில், கீழ்வரும் பொருண்மைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

  • பொருளாதார வளர்ச்சியை உயர்த்துதல்,
  • சமூக பாதுகாப்பை வலுப்படுத்துதல்,
  • இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்,
  • கல்வியின் மூலம் பெண்களின் வாழ்வாதாரம் மேம்பாடு,
  • விளிம்பு நிலை மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சி,
  • அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் மூலமாக வறுமை ஒழிப்பு ,
  • தரவுகளின் அடிப்படையிலான நிர்வாகத்தின் மூலம், அரசின் திட்டங்கள் பொதுமக்களை முழுமையாக சென்றடைவதை உறுதி செய்தல்,
  • சுற்றுச்சூழல் நீடித்த நிலைத்தன்மையையும், தலைமுறைகளுக்கு இடையேயான சமத்துவத்தை உறுதி செய்தல்,

இவை அனைத்திலும் நடப்பாண்டில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை கண்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in