கல்வித்துறை முறைகேடு; முதல்வர் மவுனம் ஏன்?- நாராயணன் திருப்பதி கேள்வி

நாராயணன் திருப்பதி | கோப்புப் படம்
நாராயணன் திருப்பதி | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: கல்வித் துறையின் முறைகேடு, இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் மவுனம் அரசின் நிர்வாக சீர்கேட்டை உணர்த்துகிறது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "கல்வித்துறை முறைகேடுகள் - முதல்வர் மவுனம் ஏன்? இந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத வராத பல மாணவர்கள், ஐடிஐ மற்றும் பாலி டெக்னிக் கல்லூரிகளில் படித்து வருவது விசாரணணயில் தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷ்.

இந்த விவகாரம் குறித்து பல்வேறு காரணங்களை, கதைகளை அரசு தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், ஒரு புதிய கதையை கட்டவிழ்த்து விட்டுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ். இது உண்மையென்றால், மாற்றுச் சான்றிதழ் (TC) பெறாமல் ஐ டி ஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் எப்படி சேர்ந்தார்கள் என்பதற்கு விசாரணை நடத்த உத்தரவிடுமா தமிழக அரசு? அப்படி சேர்த்த கல்லூரிகள் தகுதி நீக்கம் செய்யப்படுமா? அவை அரசு கல்லூரிகளாக இருந்தால் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுப்பீர்களா அன்பில் மகேஷ்?

இது ஒட்டு மொத்த நிர்வாகமே செயலிழந்து போய் விட்டது என்பதற்கான ஒப்புதல் வாக்கு மூலம் அல்லவா? மேலும், அப்படி சேர்ந்த மாணவர்களின் பெய‌ரில் அரசின் சலுகைகள் வழங்கப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டு, முறைகெடுகள் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்வீர்களா அன்பில் மகேஷ்? பள்ளிகளில் பயில்வதாக சொல்லப்படும் மாணவர்கள் அதே வேளையில், உயர்கல்வி நிலையங்களில் படிப்பதாக சொல்வது முன்னுக்கு பின் முரணானது இல்லையா?

அமைச்சர் பொன்முடிக்கு இப்படி ஒரு 'செக்' வைத்து விட்டீர்களே அன்பில் மகேஷ் ? உட்கட்சி அரசியல் அரசின் உச்சத்துக்கு வந்து விட்டதா? இந்த விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் மவுனம் அரசின் நிர்வாக சீர்கேட்டை உணர்த்துகிறது." என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in