அலுவலகத்தை காவல் காத்த தொண்டர்கள்: அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான வேட்புமனு இன்று பரிசீலனை

அலுவலகத்தை காவல் காத்த தொண்டர்கள்: அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான வேட்புமனு இன்று பரிசீலனை
Updated on
1 min read

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கக் கூடும். மேலும், பொதுச் செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வரலாம் என்று தகவல் பரவியதால், அதிமுக தொண்டர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் முன் திரண்டு காவல் காத்தனர். இன்று காலை வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அறிவித்தனர். சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி, வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது சட்ட விரோதமானது என்றுஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம்எழுதியுள்ளார். உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பழனிசாமிக்கு எதிராக யாரும்போட்டியிடக்கூடாது. அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதில் பழனிசாமி தரப்பினர் உறுதியாக உள்ளனர்.

இதற்கிடையில், பன்னீர்செல்வம் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்ய சிலர் கட்சி அலுவலகத்துக்கு வரலாம் என்றும், மீண்டும் ஜூலை 11-ம் தேதிபோல கட்சி அலுவலகம் தாக்கப்படலாம் என்றும் பழனிசாமி தரப்பினருக்கு தகவல் கிடைத்தது.

3 மணி வரை காவல்... இதையடுத்து, நேற்று காலை முதலே சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள், தங்கள் ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் முன்பு கூடி, பழனிசாமிக்கு ஆதரவாகவும், பன்னீர்செல்வத்துக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். அவர்கள் வேட்புனு தாக்கல் முடியும் நேரமான மாலை 3 மணி வரை கட்சி அலுவலகத்தை காவல் காத்தனர். பின்னர், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அடுத்தகட்ட நடவடிக்கை: தேர்தல் பணிகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்காத நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது.

நாளை (மார்ச் 21) வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாளாகும். வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்று அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in