

திருச்சி: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சிலுவம்பாளையம் பகுதியிலுள்ள கோனார்பட்டியைச் சேர்ந்த ஆனந்தாயி(57), அவரது மகன் திருமுருகன் (29), சகுந்தலா (28), மகள் தாவணாஸ்ரீ (9), பொன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி (43), நாமக்கல் மாவட்டம் தீத்தபாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி (58), அவரது மகன் தனபால் (36), உப்புக்குளத்தைச் சேர்ந்த அப்பு (எ) முருகேசன் (55) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் ஆம்னி வேனில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகேயுள்ள மகாலிங்க சுவாமி கோயிலுக்கு புறப்பட்டனர். எடப்பாடி அருகேயுள்ள கரட்டுப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (31) வேனை ஓட்டிவந்தார்.
திருச்சி மாவட்டம் வாத்தலை அருகேயுள்ள திருவாசி பகுதியில் நேற்று அதிகாலை 3.10 மணியளவில் ஆம்னி வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிரே திருச்சியிலிருந்து மரக்கட்டைகளை ஏற்றிகொண்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரி, ஆம்னி வேன் மீது நேருக்கு நேராக பயங்கரமாக மோதியது.
இதில், வேனின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. அதிலிருந்த ஓட்டுநர் சந்தோஷ் குமார், முத்துசாமி, ஆனந்தாயி, தாவணாஸ்ரீ, திருமூர்த்தி, அப்பு (எ) முருகேசன் ஆகிய 6 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். தனபால், திருமுருகன், சகுந்தலா ஆகியோர் காயமடைந்தனர்.
அவர்களை போலீஸார் மீட்டுஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 6 பேர்சடலங்களும் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. லாரி ஓட்டுநரான அரியலூர் சின்னவளையத்தை சேர்ந்த செந்தில்குமாரை பிடித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
‘இந்து தமிழ் திசை' நாளிதழ் சுட்டிக்காட்டியது: விபத்து நடந்த திருச்சி நம்பர் 1 டோல்கேட் - முசிறி வழித்தடம் 31 கி.மீ தொலைவுடையது. மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த சாலையில், வாகனப் போக்குவரத்துக்கு ஏற்ப சாலை விரிவாக்கம் செய்யப்படாததால், திருச்சி மாவட்டத்திலேயே அதிக விபத்துகள் நடக்கக் கூடிய சாலையாக இது விளங்கி வருகிறது.
இதைச் சுட்டிக்காட்டி உயிரிழப்புகளை தடுக்க சாலை விரிவாக்கம் அல்லது மாற்று வழித்தடம் உருவாக்க வேண்டும் என 'இந்து தமிழ் திசை' நாளிதழில் 2 முறை சிறப்புச் செய்தி வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர்.
அதன்தொடர்ச்சியாக ரூ.73 கோடி மதிப்பில் மாற்றுச் சாலை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தனர். எனினும், அதற்கான அடுத்தடுத்த பணிகளில் விரைவான முன்னேற்றம் இல்லாததால், இச்சாலையில் தொடர்ச்சியாக விபத்துகள் நேரிட்டு வருகின்றன. எனவே, இனியாவது தாமதிக்காமல் மாற்றுச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது விபத்து நடைபெற்ற அதே பகுதியில், 2010-ம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.