Published : 20 Mar 2023 07:02 AM
Last Updated : 20 Mar 2023 07:02 AM
சென்னை: மலைப் பிரதேசங்களில் வீடு கட்ட அனுமதி மறுப்பது என்பது, குடிமக்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமையை பறிப்பதற்கு சமம் எனக் கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக உதகை நகராட்சி ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளது.
உதகையில் உள்ள தனது நிலத்தில் வீடு கட்ட அனுமதி மறுத்து நகராட்சி ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நாகராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சரத் சந்திரன் ஆஜராகி வாதிடும்போது, "மனுதாரரின் நிலம் காப்புக்காட்டில் இருந்து 150 மீட்டர் தூரத்தில் உள்ளது. எனவே, அங்கு வீடு கட்ட தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் (மலைப் பிரதேசங்கள்) கட்டிட விதி 7(2)-ன்படி அனுமதி அளிக்க முடியாது என நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், மனுதாரரின் நிலம், முதன்மை குடியிருப்பு மண்டலத்துக்குள் வருவதால் ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அனுமதி வழங்க வேண்டும்" என வாதிட்டார்.
இந்த வழக்கில் நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘இது தொடர்பான கட்டிட விதி 7(2)-ஐ அதிகாரிகள் தவறாகப் புரிந்து கொண்டு, மனுதாரருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதா என்று ஏற்கெனவே இந்த நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
ஆனால், அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.சீனிவாஸ், இது தொடர்பாக ஏற்கெனவே 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்த தீர்ப்பை தாக்கல் செய்துவிட்டு, நீதிமன்ற அறையில் இருந்து பாதியிலேயே வெளியேறி விட்டார். அவரது இந்த செயல் வழக்கறிஞர் தொழில் தர்மத்துக்கு எதிரானது. சட்ட ரீதியாக இந்த நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு அரசு வழக்கறிஞர் சரியான பதில் தர வேண்டியது அவருடைய கடமை.
தமிழ்நாடு நகராட்சிகள் சட்டத்தின் கீழ் மலைப் பிரதேச நிலங்களில் வீடு கட்டுவதற்கான விதிகள் கடந்த 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், நகர் மற்றும் ஊரமைப்புத் துறையினரால், வீட்டு மனையாக அங்கீகரிக்கப்பட்ட நிலத்தில் வீடு கட்டுவதற்கு இந்த சட்டமும், அதன் விதிகளும் தடையாக இல்லை. விதி 7(2)-ன்படி வனபகுதியில் வீடு கட்ட ஒட்டு மொத்தமாக தடை உள்ளது என்று கருத்தில்கொண்டால், மலைப் பிரதேசங்களில் யாருமே வீடு கட்ட முடியாது.
அவ்வாறு மலைப் பிரதேசங்களில் வீடு கட்ட அனுமதி மறுப்பது என்பது குடிமக்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமையைப் பறிப்பதற்கு சமம். ஒவ்வொரு குடிமகனும் கண்ணியத்துடன் வாழ உரிமை உள்ளது. எனவே, மனுதாரருக்கு அனுமதி மறுத்து நகராட்சி ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் தனது நிலத்தில் வீடு கட்ட உதகை நகராட்சி ஆணையர் அனுமதி வழங்க வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோல வீடு கட்ட வேறு யாராவது அனுமதி கோரினால், சட்டத்துக்கு உட்பட்டு அனுமதி வழங்க வேண்டும். பிரிவு 7(2)-ஐ காரணம் காட்டி நிராகரிக்கக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT