Published : 08 Sep 2017 12:39 PM
Last Updated : 08 Sep 2017 12:39 PM

சிலை கடத்தல் வழக்கு விசாரணை அதிகாரி நியமனம்; தீர்ப்பை சரியாக அமல் படுத்தாதது ஏன்?- விளக்கம் கேட்டு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சரியாக பின்பற்றாதது ஏன் என்று உரிய விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி பொன்.மாணிக்கவேலை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் அவர் தலைமையில் சிறப்பு குழு அமைக்க வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அரசு காலம் தாழ்த்தியதையடுத்து, இது தொடர்பாக ஆணையை வெளியிட்டு அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என கடந்த செவ்வாய்க்கிழமை நீதிபதி மகாதேவன் மீண்டும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மதுரையிலிருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிபதி ஆர்.மகாதேவன் வழக்கை விசாரித்தார். சிலை கடத்தல் வழக்குகளை விசாரிப்பதற்காக ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு குழு அமைத்து அரசு ஆணை பிறப்பித்து விட்டதாக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும் சிலைகடத்தல் தொடர்பாக உள்ள 19 வழக்குகள் பொன்.மாணிக்கவேல் விசாரிப்பதற்காக மாற்றப்பட்டு விட்டதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். பிற வழக்குகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரிக்கும் என தெரிவித்தார்.

இதனால் கோபமடைந்த நீதிபதி, 531 சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், எதனடிப்படையில் டி.ஜி.பி 19 வழக்குகளை மட்டும் மாற்றி இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்தார், என கேள்வி எழுப்பினார்.

நீதிமன்ற உத்தரவின்படி, கும்பகோணத்தில் சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டுவிட்டதா? எனவும் வினவினார்.

அதற்கும் உரிய விளக்கத்தை அரசு தரப்பில் கொடுக்காததை அடுத்து, வரும் திங்கட்கிழமை தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன் பின்னர் அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று நேரில் ஆஜராவது குறித்து நீதிபதி உத்தரவு பிறப்பிக்கவில்லை.

இதனையடுத்து அரசு வழக்கறிஞர் 19 வழக்குகளை மட்டும் மாற்ற ஐ.ஜி.பொன். மாணிக்கவேல் பரிந்துரை கடிதம் கொடுத்ததன் அடிப்படையிலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எனக் கூறினார்.

அதற்கு நீதிபதி, தலைமை செயலாளர், டி.ஜி.பி, ஐ.ஜி என யாராக இருந்தாலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டுமே தவிர அதன் மீற அவர்களுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.

இதனைடுத்து அரசு வழக்கறிஞர், ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மற்றும் அரசிடம் இது குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரினார். இதனையேற்ற நீதிபதி, சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் பொன்.மாணிக்கவேலுக்கு மாற்றாதது ஏன் எனவும், சிறப்பு நீதிமன்றம் அமைக்காதது ஏன் என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டார்.

நீதிபதி மகாதேவன், இந்த தமிழ் மண், உலகத்துக்கே ஞான பீடம், இங்குள்ள தொன்மையான சிலைகளை யாரும் திருட்டுத்தனமாக எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம். மேலும் இந்த சிலைக் கடத்தலில் யார் ஈடுபட்டிருந்தாலும், எந்த அதிகாரிகள் ஈடுபட்டிருந்தாலும், தொடர்பிருந்தாலும் அவர்களை இந்த நீதிமன்றம் சும்மா விடாது, அவர்கள் மேல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை வழக்கறிஞர், இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அர்ச்சகர் விவரம், சிலை விவரம், கோயில்கள் விவரம் அனைத்தும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதன்பிறகு இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணையை செப்டம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து டி.ஜி.பி செப்டம்பர் 5ல் உத்தரவிட்டுள்ளார்.

ஐ.பி.எஸ். அதிகாரிகளான ஏ.ஜி.பொன்.மாணிக்கவேல், ஆர்.தமிழ் சந்திரன் ஆகியோருடன் ஒரு டி.எஸ்.பி, 5 ஆய்வாளர், 3 உதவி ஆய்வாளர், 4 சிறப்பு உதவி ஆய்வாளர், 16 காவலர்கள் என 31 பேர் அடங்கிய குழுவை உருவாக்கி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x