Published : 20 Mar 2023 06:16 AM
Last Updated : 20 Mar 2023 06:16 AM

செம்பரம்பாக்கத்தில் இருந்து கூடுதல் குடிநீர் கொண்டுவர 21 கிமீ தூரத்துக்கு குழாய் அமைக்கும் பணி: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முதல் கோயம்பேடு வரை 21 கி.மீ தூரத்துக்கு குழாய் அமைக்கும் பணியை நேற்று குழாய்க்குள் இறங்கி அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பூந்தமல்லி: சென்னைக்கு கூடுதல் நீரை எடுத்து வரும் வகையில் செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கோயம்பேடு வரை 21 கிமீ தூரத்துக்கு ராட்சத குழாய் அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பூந்தமல்லியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து, சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 225 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதனை 580 மில்லியன் லிட்டராக அதிகரிக்கும் வகையில், செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முதல் கோயம்பேடு வரை 21 கிமீ தூரத்துக்கு ரூ.43.75 கோடி மதிப்பீட்டில் 2-ம் பிரதான குழாய் அமைக்கும் பணிகளை சென்னைக் குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது.

இப்பணியை நேற்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பூந்தமல்லி புறவழிச் சாலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் 20 அடி ஆழத்தில் நவீன தொழில் நுட்பத்துடன் குழாய் பதிக்கும் பணிகளை குழாய்க்குள் இறங்கி பார்வையிட்டார். இப்பணியை குறித்த காலத்துக்குள் திறம்பட மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அப்போது அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்ததாவது: செம்பரம்பாக்கம் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு கூடுதல் நீர்வழங்குவதற்காக, 21 கிமீ தூரத்துக்கு ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், பூந்தமல்லி பகுதியில் மேம்பாலம் இருப்பதால், குழாயை நேரடியாக எடுத்துவர முடியாததால், கடந்த 7 ஆண்டுகளாக இப்பணி நடைபெறவில்லை. புதிதாக டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் ரூ.7.7 கோடி மதிப்பில். 1.7 கி.மீ., தூரத்துக்கு பூந்தமல்லி புறவழிச்சாலைக்கு அடியில் ராட்சத குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி விரைவில் முடிவுக்கு வரும்.

அதன்பிறகு, செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து, சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 580 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு வரப்படும். சென்னைகுடிநீர் வாரியம் மூலம் வகுக்கப்பட்டுள்ள புதிய திட்டம் மூலம் சென்னையில் உள்ள 15 லட்சம் குடும்பங்களுக்கு குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணியும் ஒரே நேரத்தில் நடைபெறும். இந்த பணிகள் முடிவடைந்தால் சென்னை மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். இவ்வாறு கூறினார்.

இந்த ஆய்வின்போது, சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் ஆர்.கிர்லோஷ்குமார், செயல் இயக்குநர் ராஜகோபால் சுன்கரோ, பொறியியல் இயக்குநர் சாமிலால் ஜான்சன், தலைமை பொறியாளர் ஜெயகர் ஜேசுதாஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x