

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் மக்களாலும், தொண்டர்களாலும் நிராகரிக்கப்பட்டவர்கள் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்த பேட்டிகள் ஒரு விரக்தியின் உச்சம். அதிமுக தொண்டனின் கோயிலான எம்ஜிஆர் மாளிகையை பன்னீர்செல்வம் தலைமையில் குண்டர்களோடு, தீயசக்திகளோடு புடைசூழ வந்து சூறையாடியது, அதன் அடிப்படையில் அவர் மீது கிரிமினல் வழக்குப் போடப்பட்டுள்ளது.
அவர் கட்சியின் நலன் அடிப்படையில் எந்த காலத்திலாவது செயல்பட்டுள்ளாரா? அவருக்கு தலைவர்கள் என்றால் டிடிவி தினகரனும், சசிகலாவும்தான். 2016-ல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சட்டப்பேரவையில் திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரும்போது, அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க நினைத்தது மாபெரும் துரோகம்.
2019-ம் ஆண்டு 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 10 எம்எல்ஏக்கள் வந்தால்தான் ஆட்சியைத் தக்கவைக்க முடியும். பழனிசாமி முயற்சியில் 9 தொகுதியில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்தார். அந்த 22 தொகுதியில் பெரியகுளத்திலும், ஆண்டிப்பட்டியிலும் பன்னீர்செல்வத்தால் வெற்றிபெற முடியவில்லை. அதே நேரத்தில் மகனை மட்டும் வெற்றிபெற செய்தார். இது பழனிசாமிக்கு செய்த மிகப்பெரிய துரோகம்.
2021 பொதுத்தேர்தலில் அவருடைய மாவட்டத்தில் அவர் மட்டுமே வெற்றிபெறுகிறார். அவரை பொறுத்தவரையில் பழனிசாமி முதல்வராக கூடாது. பண்ருட்டி ராமச்சந்திரன் சர்வகட்சித் தலைவர். பன்னீர்செல்வம், சசிகலா எல்லாம் மக்களால், தொண்டர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்றார்.