

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்த பிறகு இயக்கப்படும் மெட்ரோ ரயில்களைப் பராமரிக்கும் வகையில், மாதவரம், பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. இவற்றை அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் பரங்கிமலை-சென்ட்ரல், விமானநிலையம்-விம்கோ நகர் ஆகிய 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை கோயம்பேட்டில் உள்ள பணிமனையில் பராமரிக்கப்படுகின்றன. விம்கோ நகரில் 20 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பணிமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்தப் பணிகளை 2026-ம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வழித்தடங்களில் இயங்கும் ரயில்களை பராமரிக்கும் வகையில், மாதவரம், பூந்தமல்லியில் தலா ஒரு மெட்ரோ ரயில் பணிமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இவற்றை 3 ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிடப்பட்டு, தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரியில் பணிகள் தொடங்கின.
மாதவரத்தில் 48.89 ஏக்கர் பரப்பில், தரைத் தளத்தில் ரூ.284.51 கோடியில் பணிமனை அமைக்கப்படுகிறது. இதில் 3 பெட்டிகள் கொண்ட ஒரு மெட்ரோ ரயில் என்ற அடிப்படையில், 110 மெட்ரோ ரயில்கள் நிறுத்திப் பராமரிக்கப்படும்.இங்கு 24 இருப்புப் பாதைகள் அமைக்கப்படுகின்றன.
மெட்ரோ ரயில்களை நிறுத்த 10 பாதைகள், பழுது மற்றும் சுத்தம் செய்ய 7 பாதைகள், ரயில்களை ஆய்வு செய்ய 7 பாதைகள் என மொத்தம் 24 இருப்புப் பாதைகள் அமைக்கப்படுகின்றன. மேலும், 1.4 கி.மீ. நீளத்துக்கு சோதனை ஓட்டத்துக்கான இருப்புப் பாதையும் அமைக்கப்பட உள்ளது.
மெட்ரோ ரயில்களைப் பராமரிக்கவும், எதிர்காலத்தில் மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடம் மற்றும் மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ள மெட்ரோ ரயில்களுக்கான பணிமனையாகவும் மாதவரம் பணிமனை திகழும்.
பூந்தமல்லி பணிமனை: பூந்தமல்லியில் தரைதளத்தில் 38 ஏக்கர் பரப்பில் 187.5 கோடியில் மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் பணி தொடங்கி, இதுவரை 30 % பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதில் 14 இருப்புப் பாதைகளில் ரயில்களை நிறுத்த முடியும். பராமரிப்பு, ஆய்வுக்காக 9 இருப்புப் பாதைகளும், மின்சேவை, ரயில் இயக்கம் பராமரிப்புக்காக 18 கட்டிடங்களும் அமைக்கப்பட உள்ளன. மொத்தம் 78 ரயில்களை நிறுத்தி, பராமரிக்க முடியும். கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி பைபாஸ் 4-வது வழித்தடத்தில் செயல்படும் மெட்ரோ ரயில்கள் இந்த பணிமனையில் பராமரிக்கப்படும்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிந்தபிறகு, 138 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில்களை நிறுத்தவும், பராமரிக்கவும் இந்த இரண்டு பணிமனைகளும் உதவும்” என்றார்.