குடியாத்தம் சாமியார் மலை பகுதியில் சூறைக்காற்று வீசியதால் சிவகாமி என்பவரது வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.
குடியாத்தம் சாமியார் மலை பகுதியில் சூறைக்காற்று வீசியதால் சிவகாமி என்பவரது வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் சூறை காற்றுடன் ஆலங்கட்டி மழை: 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

Published on

வேலூர்/திருப்பத்தூர்: வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் திடீரென சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். குடியாத்தம் பகுதியில் பெய்த கனமழையால் சாலையோரம் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தும், மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் வெயில் கொடுமையால் பரிதவித்து வந்தனர். கோடை வெயிலை தணிக்க மழை பெய்யாதா? என பொதுமக்கள் ஏங்கி தவித்தனர். மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வருணபகவான் கருணையால் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் கோடை மழை பெய்தது.

அதிகாலை 2 மணியளவில் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. வேலூர் மாவட்டம் காட்பாடி, சத்துவாச்சாரி, வள்ளலார், ரங்காபுரம், தொரப்பாடி, கொணவட்டம், பாகாயம், ஓட்டேரி, சங்கரன்பாளையம், சாயிநாதபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது.

மாநகராட்சி 1 மற்றும் 2-வது மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாததாலும், ஒரு சில இடங்களில் இன்னும் பணிகள் முடிவடையாததால் மழைநீர் சாலைகளில் குட்டைப்போல் தேங்கி நின்றது. கழிவுநீருடன் கலந்த மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

குடியாத்தம் பகுதியில் அதிகாலை 3 மணியளவில் பலத்த காற்று வீசியது. சாமியார் மலை பகுதியில் சிவகாமி என்பவரது வீட்டின் மேற்கூரை காற்றினால் தூக்கி வீசப்பட்டது. அதேபோல, பாக்கம் பகுதியில் சாலையோரம் இருந்த மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

குடியாத்தம் அடுத்த தட்டப் பாறை, பரதராமி, உப்பரப்பள்ளி, சேம்பள்ளி, சைனகுண்டா உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்தன. உப்பரப்பள்ளி அருகே பழமை வாய்ந்த மரம் ஒன்று முறிந்து அருகேயுள்ள கோயில் சுவர் மீது விழுந்ததால் கோயில் சுவர் இடிந்து விழுந்தது.

குடியாத்தம் பகுதியில் பெய்த கனமழையால் காமராஜர் பாலத்தில் ஒரு அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. குடியாத்தம் நகரில் தாழ்வான பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதைத்தொடர்ந்து, குடியாத்தம் நகராட்சி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், காவல் துறையினர் விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். சாலையோரம் இருந்த மரங்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அதேபோல, காட்பாடி - குடியாத்தம் சாலையில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்தன. 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் மழையால் சேதமடைந்ததால் அப்பகுதி முழுவதும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மழை யால் சேதமடைந்தன. குடியாத்தம் - பலமநேர் சாலையில் முறிந்து விழுந்த மரங்கள் பொக்லைன் மூலம் அகற்றும் பணிகள் நேற்று காலை வரை நடைபெற்றது.

இதனால், அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரங்கல் துருகம், மேல்குப்பம், மலையாம்பட்டு, சம்மந்திகுப்பம், வெங்கடசமுத்திரம், கைலாசகிரி, குமாரமங்கலம், கரும்பூர், தேவலாபுரம், மிட்டாளம், சின்னவரிகம், துத்தி்பபட்டு, மலை யாம்பட்டு, கதவாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் தொடங்கிய மழை விடிய,விடிய பெய்தது.

இதில், அரங்கல்துருகம் கிராமத்தைச் சேர்ந்த குலசேகரன், மோகன்தாஸ் என்பவரது நிலத்தில் இருந்த தென்னை மரங்கள் மீது இடி விழுந்ததால் தென்னை மரங்கள் சேதமடைந்தன. தென்னை மரங்கள் மீது இடி விழுந்ததால் மரத்தில் இருந்த 2 குரங்குகள் பரிதாபமாக உயிரிழந்தன.

இதையடுத்து, குரங்குகளின் உடல்களை மீட்ட கிராம மக்கள் அடக்கம் செய்தனர். நேற்று முன்தினம் விடிய,விடிய பெய்த கனமழையால் நேற்று வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. கோடை வெயில் தொடங்கிய சில நாட்களில் சூறைக்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

நேற்று காலை நிலவரப்படி வேலூர், திருப்பத்தூர் மாவட்டங் களில் பதிவான மழையளவு விவரம் வருமாறு:

குடியாத்தம் 52 மி.மீ., மேல் ஆலத்தூர் 32.8, காட்பாடி 21, பொன்னை 19.2, சேவூர் 23.6, வேலூர் 21.8, பேரணாம்பட்டு 1.5, கே.வி.குப்பம் 43, ஆம்பூர் 10, வடபுதுப்பட்டு 9.2, ஆலங்காயம் 16.2, வாணியம்பாடி 18, நாட் றாம்பள்ளி 7.2, கேத்தாண்டப் பட்டி 2 மி.மீ., திருப்பத்தூர் 2.80 மி.மீட்டர் என பதிவாகியிருந்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in