Published : 19 Mar 2023 12:56 PM
Last Updated : 19 Mar 2023 12:56 PM

வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை தமிழில் அமையுங்கள் - வணிகர்களுக்கு ராமதாஸ் கடிதம்

சென்னை: நாடு கடந்து தமிழ் வளர்த்த உங்களால்... பெயர்ப்பலகையில் வளர்க்க முடியாதா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வணிகர்களுக்கு வெளியிட்டுள்ள கடித்தத்தில் கூறியுள்ளதாவது, “என் உயிரினும் மேலான வணிகப் பெருமக்களே! உழவர்கள் இல்லாவிட்டால் இந்த உலகம் பசியாற முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை வணிகர்கள் இல்லாமல் வாழ்க்கை நடத்த இயலாது என்பதும். சமூகத்தின் தவிர்க்க முடியாத பிரிவினரான வணிகர்கள் தான் அன்னைத் தமிழை வளர்ப்பதிலும் தவிர்க்க முடியாதவர்கள். அந்த அடிப்படையிலும், தகுதியிலும் தான் வணிகச் சொந்தங்களுக்கு இந்த மடலை நான் வரைகிறேன்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று தான் முழங்கினோம். ஆனால், எங்குமே தமிழ் இல்லை என்பது தான் கசக்கும் உண்மை. எங்கும் தமிழ் இல்லை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருப்பவை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தான். சென்னையில் ஆங்கிலத்தில் பெயர்ப்பலகைகள் மின்னுகின்றன. ஆனால், தனித்தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகளை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. சென்னையில் மட்டும் தான் என்றில்லை... தமிழ்நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் அழகுத் தமிழுக்கு மாற்றாக அரைகுறை ஆங்கிலத்தில் தான் காட்சியளிக்கின்றன. அக்காட்சியை காண மனம் பொறுக்கவில்லை.

1945-ஆம் ஆண்டில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மதுரைக்குச் சென்றபோது அங்குள்ள கடைகளின் பெயர்ப்பலகைகளில் தமிழ் இல்லாததைக் கண்டு மனம் நொந்தார். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரத்தின் தெருக்களிலேயே தமிழுக்கு இடம் இல்லையா? என்ற வேதனையில் அவர் எழுதியது தான்,‘‘தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை’’ என்ற தமிழியக்கப் பாடல். அன்று பாவேந்தருக்கு ஏற்பட்ட அதே வருத்தமும், வாட்டமும் இன்று வரை என்னைப் போன்றவர்களை வாட்டிக் கொண்டிருக்கிறது. அதை உங்களால் மட்டுமே போக்க முடியும்.

அந்த நம்பிக்கையில் தான்1997-ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். இப்போதும் அதற்காகத் தான் தமிழைத்தேடி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை சென்னையிலிருந்து மதுரைக்கு மேற்கொண்டேன். ஆனால், அந்த பயணத்திலும் கடைகளின் பெயர்ப்பலகைகள் உள்பட எங்கும் தமிழைக் காண முடியவில்லை.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக கடைகளின் பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் அமைக்க வேண்டும்; தமிழ்நாடு அரசு வரையறுத்துள்ளவாறு எழுத வேண்டும் என்று கோரி எனது சார்பில் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவர் கோ.க. மணி அண்மையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் திரு.விக்கிரமராசா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர்களும் கடைகளின் பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் எழுத வேண்டும் என்ற கருத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி பெயர்ப்பலகைகளை விரைவில் மாற்றுவதாக வாக்குறுதி அளித்து உள்ளனர். அதைக் கேட்ட போது எனது இதயம் மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் துள்ளிக் குதித்தது.

எனது பார்வையில், தமிழ் மொழியை வளர்த்ததிலும், பரப்பியதிலும் வணிகர்களுக்கு பெரும் பங்கு உண்டு. வணிகத்திற்காக உலகின் பல நாடுகளுக்கு சென்ற வணிகர்கள் அங்கு தமிழ் மொழியை பரப்பியுள்ளனர். ஸ்பெயின் நாட்டில் பாஸ்கு என்ற இனத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் பேசும் பாஸ்கு மொழி 7000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த மொழியின் பெரும்பான்மையானச் சொற்கள் ஓசையிலும், பொருளிலும் தமிழை ஒத்திருக்கின்றன.

பாஸ்கு மொழியில் அமா என்ற சொல்லுக்கு அம்மா என்று பொருள். செய்ன் என்ற சொல்லுக்கு சேய், குழந்தை என்று பொருள். இப்படியாக 2500&க்கும் மேற்பட்ட சொற்கள் தமிழ்ச் சொற்களின் திரிந்த வடிவமாகவே உள்ளன. இதையெல்லாம் இங்கு பதிவு செய்வதற்கான காரணம்.... பாஸ்கு மொழியே தமிழ் மொழியிலிருந்து தோன்றியது என்பதை தெரிவிப்பதற்காகத் தான். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வணிகம் செய்ய ஸ்பெயினுக்கு சென்ற தமிழ் வணிகர்கள் அங்கு தங்கியிருக்கக் கூடும்; அவர்கள் வாயிலாக தமிழிலிருந்து பாஸ்கு மொழி உருவாகியிருக்கக் கூடும் என்றெல்லாம் கருதப் படுகிறது. தமிழை வளர்ப்பதில் வணிகர்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு இதுவே சான்று.

வெளிநாட்டில் தமிழ் வளர்த்த வணிகர்களால் அவர்களின் சொந்த ஊரில், சொந்தக் கடையின் பெயர்ப்பலகைகளில் தமிழ் வளர்க்க முடியாதா? கண்டிப்பாக முடியும். இதுவரை வணிகர்கள் அதை செய்யாததற்குக் காரணம்.... அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாதது தான். தமிழைத் தேடி பரப்புரை பயணத்தின் மூலம் தமிழ் மொழியில் பெயர்ப்பலகைகள் அமைப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

விழிப்புணர்வு பெற்ற வணிகப் பெருமக்களே.... அதிக அளவாக அடுத்த ஒரு மாதத்திற்குள் உங்கள் கடைகளின் பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் மாற்றி எழுதுங்கள். பெயர்ப்பலகைகள் தொடர்பாக 1948ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்து 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி 575 எண் கொண்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணையின் முக்கியக்கூறுகள் வருமாறு:

1. எல்லா நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழில் இருக்க வேண்டும். பிறமொழிகள் பயன்படுத்த வேண்டும் என்றால், ஆங்கில வரிகள் இரண்டாம் இடத்திலும் ஏனைய மொழிகள் அதற்கு அடுத்தும் வர வேண்டும்.

2. பெயர்ப் பலகைகளில் பிற மொழிகளைப் பயன்படுத்தும் போது தமிழ், ஆங்கிலம் மற்றும் ஏனைய மொழிகளுக்கான இடங்கள் 5 : 3 : 2 என்ற அளவில் இருக்க வேண்டும்.

3. பெயர்ப் பலகையிலுள்ள எழுத்துக்கள் சீர்திருத்த வரி வடிவில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட வரையறைக்கு உட்பட்டு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அமைக்கும்படி வணிகப் பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வெளிநாடுகளில் தமிழ் வளர்த்த உங்களால் உள்நாட்டில் தமிழ் வளர்க்க கண்டிப்பாக இயலும். அவ்வாறு தமிழில் பெயர்ப்பலகை அமைக்கும் வணிகர்களுக்கு மலர்க்கொத்து கொடுத்து பாராட்டுவதற்கு நான் காத்திருக்கிறேன். மிக்க நன்றி! ” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x