Published : 19 Mar 2023 07:16 AM
Last Updated : 19 Mar 2023 07:16 AM

சாலைப் பணிக்கு ஒப்பந்ததாரரிடம் 18% கமிஷன் கேட்கும் நெல்லை மாநகர திமுக செயலர் - வலைதளங்களில் வீடியோ வைரல்

திருநெல்வேலி: சாலைப்பணிக்கு 18 சதவீதம் கமிஷன் தொகை வழங்குமாறு, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் மாநகர திமுக செயலர் சுப்பிரமணியன் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் எதிர்புறம் இருப்பவர் தன் செல்போனில் வீடியோ கேமராவை ஆன்செய்து, அதனை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு அங்கு நடைபெறும் உரையாடலை படம்பிடித்துள்ளார். அதில், திருநெல்வேலி மாநகர திமுக செயலர் சுப்பிரமணியன் உரையாடுகிறார். அதில், ‘ஊரக வளர்ச்சி முகமை சாலைப்பணி உங்களுக்கு கிடைக்கச் சொல்கிறேன். எல்லாம் ஓகே ஆகிவிட்டால் 18 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டும். அந்த 18 சதவீதத்துக்கு ஜிஎஸ்டியும் கொடுக்க வேண்டும்.

தொகுதிக்கு ஒருவர்: திருநெல்வேலி மாவட்டத்துக்கு ராஜகண்ணப்பன் பொறுப்பு அமைச்சர். மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொருவர் என்று பிரித்துவிட்டோம். ராதாபுரத்துக்கு அப்பாவு அண்ணன், பாளையங்கோட்டைக்கு வகாப், அம்பாசமுத்திரத்துக்கு அண்ணாச்சி. திருநெல்வேலிக்கு ராஜகண்ணப்பன்தான் பொறுப்பு அமைச்சர். அவர் ஓகே சொன்னதும் கமிஷனை கொடுத்துவிடுங்கள். கமிஷனுக்கு ஜிஎஸ்டி தொகை சேர்த்துதான் கொடுக்க வேண்டும். சென்னை, காஞ்சிபுரத்தில் 18 சதவீதம். மதுரையும் அப்படித்தான். தூத்துக்குடியில் கமிஷன் 22 சதவீதத்துக்கும் அதிகம்.

திருநெல்வேலி மத்திய மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு மாநகரத்தில் உள்ள பணிகள் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பலருக்கு நான் கமிஷனை பிரித்து கொடுக்க வேண்டும். இன்றே பணத்தை தந்துவிட்டால், நாளை டெண்டரை நிறுத்திவிட்டு புதிய டெண்டர் போட்டுவிடலாம்’ என்று சுப்பிரமணியன் பேசுவது போல் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

அப்போது எதிரே இருக்கும் ஒப்பந்ததாரர், ‘எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும். ஜிஎஸ்டி தொகையை கழித்துக் கொள்ளுங்கள். அது மட்டுமே ரூ.55 லட்சம் வரையில் வருகிறது’ என்று தெரிவிக்கிறார். ஆனால் ‘கண்டிப்பாக ஜிஎஸ்டியை சேர்த்து கொடுக்க வேண்டும்’ என்று சுப்பிரமணியன் கூறுகிறார். 8 நிமிடங்கள் வரையிலான இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x