

கிருஷ்ணகிரி: சூளகிரி பகுதியில் நீளமன பச்சை கத்தரிக்காய் விளைச்சல் அதிகரித்து, விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறி மற்றும் மலர் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு முள்ளங்கி, வெண்டை, கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன.
கத்தரிக்காயில் பல ரகம்: இதில், பல ரக கத்தரிக்காயை சூளகிரி, ஓட்டர்பாளையம் சிம்பலதிராட்டி, மாரண்டப்பள்ளி, அத்திமுகம், சீபம், கீரனப்பள்ளி, உத்தனப்பள்ளி, திம்மசந்திரம், குடிசாதனப்பள்ளி பகுதி விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். குறிப்பாக, நிகழாண்டில், நீண்ட பச்சை நிற கத்தரிக்காயை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.
இக்கத்தரிக்காய்கள் அறுவடைக்குப் பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்குச் செல்கின்றன. தற்போது, இந்த ரகக் கத்தரிக்காய் மகசூல் அதிகரித்துள்ளதால், விலை சரிவடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சந்தையில் வரவேற்பு - இது தொடர்பாக சூளகிரியைச் சேர்ந்த விவசாயி மன்னா கூறியதாவது: நீண்ட பச்சை கத்தரிக்காய் கடந்தாண்டில் கிலோ ரூ.100-க்கு மேல் விற்பனையானது. மேலும், ஆந்திரா, கர்நாடக மாநில சந்தைகளில் இந்த ரகத்துக்கு நல்ல வரவேற்பு உண்டு. இதனால், விவசாயிகள் பலர் இந்த ரக கத்தரிக்காயை அதிகளவில் சாகுபடி செய்தனர்.
தற்போது, மகசூல் அதிகரித்து, கிலோ ரூ.10-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இங்கிருந்து சரக்கு வாகனம் மூலம் கோவை, பெங்களூரு, குப்பம் பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம். ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. விலை வீழ்ச்சியால் அறுவடை கூலி கூட கிடைக்கவில்லை. இதனால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
காப்பீடு திட்டம்: இவ்வகையான காய்கறிகளுக்குக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி, விலை குறையும் காலங்களில் இழப்பீடு வழங்க வேண்டும். தற்போது, பச்சை கத்தரிக்காய் சாகுபடி செய்த விவசாயிகள் அதிகளவில் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். எனவே, அடுத்த சாகுபடிக்கான விதை, உரங்கள் உள்ளிட்டவை 100 சதவீதம் மானியத்தில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.