

ஆண்டிபட்டி: வைகை அணைக்கான நீர்வரத்தும், நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருவதால் கோடையில் மதுரை உட்பட 5 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. 71 அடி கொள்ளளவுள்ள இந்த அணையின் நீர்த்தேக்கப் பரப்பு 10 சதுர கிமீ ஆகும். இதில் 6 ஆயிரத்து 91 மில்லியன் கன அடி அளவு தண்ணீரை தேக்க முடியும்.
கடந்த சில மாதங்களாக அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு மேலாகவே இருந்து வந்தது. கடந்த சில வாரங்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், வைகையின் துணைஆறுகளில் நீர்வரத்து இல்லை. குறிப்பாக மூல வைகை வறண்டு மணல் வெளியாக மாறி விட்டது. தற்போது முல்லை பெரியாறு அணையில் இருந்து மட்டுமே விநாடிக்கு 221 கன அடி நீர்வரத்து உள்ளது.
குடிநீர் திட்டங்களுக்காக அணையில் இருந்து விநாடிக்கு 72 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் தற்போது 53.74 அடியாக உள்ளது. இதிலும் 15 அடி வரை வண்டல் மண் தேங்கி உள்ளது. இதனால், இருக்கும் நீரையே அடுத்து வரும் 3 மாதங்களுக்கு குடிநீருக்காகப் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
இதன் காரணமாக கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. கோடை மழை பெய்தால் மட்டுமே ஓரளவுக்கு நீர்வரத்து வரும் நிலை உள்ளது.
இது குறித்து பொதுப்பணித் துறையினர் கூறுகையில், தென்மேற்குப் பருவமழை மூலமே நீர்வரத்து சீராகும். மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் தென்மேற்குப் பருமழை தொடங்கும். இம்மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். அதேநேரத்தில் கோடை மழை பெய்தால் குடிநீர் பிரச்சினையை ஓரளவு சமாளிக்கலாம் என்றனர்.