Published : 18 Mar 2023 07:34 PM
Last Updated : 18 Mar 2023 07:34 PM

தி.மலை பாஜக நிர்வாகியிடம் இருந்து ரூ.50 கோடி மதிப்பிலான 23,800 சதுர அடி இடத்தை மீட்டு அரசு நடவடிக்கை

தி.மலையில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து பாஜக நிர்வாகி கட்டியிருந்த வீடு பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பாஜக நிர்வாகியிடம் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள 23,800 சதுர அடி இடத்தை இந்து சமய அறநிலையத் துறை சனிக்கிழமை மீட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உடன் இணைந்த அம்மணி அம்மன் மடத்துக்கு சொந்தமான 23,800 சதுரடி இடம், கோயிலின் வடக்கு திசையில் உள்ள அம்மணி அம்மன் கோபுரம் முன்பு உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து வரும் இந்த இடத்தை, நிர்வகிப்பதில் பிரச்சினை எழுந்தபோது, திருவண்ணாமலை மாவட்ட இந்து முன்னணி மாவட்ட தலைராக இருந்த வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர், சுமார் 20 ஆண்டுக்கு முன்பு, தன் வசப்படுத்தி கொண்டுள்ளார்.

இதையடுத்து அந்த இடத்தில், சுமார் ஆயிரம் சதுரடியில் வீடு (தரைத்தளம், முதல் தளம்) கட்டி உள்ளார். தரைத்தளத்தில் வழக்கறிஞர் அலுவலகம் செயல்பட்டு வந்ததுள்ளது. அம்மணி அம்மன் மடத்தின் அறைகளை வணிக ரீதியாக பயன்படுத்தி வந்துள்ளார். காலி இடத்தில் கார்களை நிறுத்தவும், விநாயகர் சிலை வடிவமைக்கும் இடமாகவும் பயன்படுத்தி உள்ளார்.

கோயிலுக்கு வாடகை செலுத்தவில்லை என்பதால் பல லட்சம் ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்து முன்னணியின் மாவட்டத் தலைவராக இருந்த டி.எஸ் சங்கர், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு மத்திய அரசு தரப்பு வழக்கறிஞராக உள்ளார். மேலும், பாஜக ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர் மற்றும் அவரது மனைவி தீபா ஆகியோர், அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான 23,800 சதுரடி இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி, இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையரால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது.

04-05-22-ம் தேதி நடைபெற்ற விசாரணைக்கு டிஎஸ் சங்கர், தீபா ஆகியோர் ஆஜராகததால், 23,800 சதுர அடி இடமும் கோயிலுக்கு சொந்தமான என முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து, திருவண்ணாமலை சார்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் டிஎஸ் சங்கர் மனு தாக்கல் செய்துள்ளார். இவர், போதிய ஆவணங்களை தாக்கல் செய்யாததால், அவரது மனுவை சார்பு நீதிமன்றம் கடந்த 13-ம் தேதி தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, அண்ணாமலையார் கோயில் உடன் இணைந்த அம்மணி அம்மன் மடத்துக்கு சொந்தமான 23,800 இடத்தை ஒப்படைக்க வேண்டும் என வழக்கறிஞர் டிஎஸ் சங்கர் மற்றும் அவரது மனைவி தீபாவுக்கு கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) வே.குமரேசன் கடந்த 15-ம் தேதி நோட்டீஸ் வழங்கி உள்ளார். 2நாட்களில் ஒப்படைக்க தவறினால், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால், காவல்துறை பாதுகாப்புடன் ரூ.50 கோடி மதிப்புள்ள 23,800 சதுரடி இடத்தை மீட்கும் பணியை இந்து சமய அறநிலையத் துறை சனிக்கிழமை காலை தொடங்கியது. 2 மாடி வீட்டின் கட்டிடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து, 23,800 சதுரடி இடத்தை சுற்றி கம்பி வேலி அமைத்து சீல் வைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x