மதுரை - நத்தம் பறக்கும் பாலத்தின் தூண்களில் தமிழகப் பண்பாட்டு அடையாளங்கள் - சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை நத்தம் பறக்கும் பாலத்தின் தூண்களில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள் | படங்கள்: நா.தங்கரத்தினம்
மதுரை நத்தம் பறக்கும் பாலத்தின் தூண்களில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள் | படங்கள்: நா.தங்கரத்தினம்
Updated on
1 min read

மதுரை: மதுரை - நத்தம் பறக்கும் பாலத்தின் தூண்களை அழகுபடுத்தும் வகையில் தமிழக பண்பாட்டு அடையாளங்கள் காட்சிபடுத்தப்படும் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தில் மதுரை தல்லாகுளத்தில் இருந்து நத்தம் வரையிலான 35 கிமீ தூரத்திற்கு ரூ.1,028 கோடியில் பறக்கும் பாலம் பணிகள் நடந்து வருகிறது. இதனை சனிக்கிழமை மதுரை எம்பி, சு.வெங்கடேசன் ஆய்வு செய்தார்.அப்போது, தல்லாகுளம் கலைஞர் நூலகப் பகுதியிலிருந்து செட்டிகுளம் வரையிலான 7 கிமீ தூரத்தில் உள்ள 188 தூண்களில் இடம்பெறவுள்ள கலை வேலைப்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்தார்.

பின்பு அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “மதுரை-நத்தம் பறக்கும் பாலப்பணிகள் முடிந்துவிட்டதால், விரைவில் மத்திய அமைச்சர்கள் திறந்து வைக்கவுள்ளனர். இந்த தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்க்கும் வகையில் அழகுபடுத்தப்படவுள்ளன.

பாலத்தின் தூண்களில் தமிழகம் மற்றும் மதுரையின் பண்பாட்டு பெருமையை விளக்கும் கலைப்படைப்புகள் இடம்பெறவுள்ளன. இதில் மீனாட்சியம்மன், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் காட்சிகள், திருவள்ளுவர், மதுரையிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலங்கள், கீழடி அகழாய்வு, ஜல்லிக்கட்டு போன்ற பல்வேறு கலைநயமிக்க ஓவியங்கள், சிற்பங்கள் இடம் பெறவுள்ளன. மேலும், 188 தூண்களிலும் திருக்குறள் வாசகங்கள் பொறிக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ, கோ. தளபதி, மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in