Published : 18 Mar 2023 07:10 PM
Last Updated : 18 Mar 2023 07:10 PM

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டியது அரசின் கடமை: வேல்முருகன்

கோப்புப்படம்

சென்னை: "நிலம் கையகப்படுத்துதல் சட்டம், விவசாய கடனுக்கான வட்டி விகிதம் உயர்வு என விவசாயிகள் மீது ஒன்றிய அரசு தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழ்நாடு அரசு மறுப்பது, வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தனியார் நிறுவனங்கள் பாலின் கொழுப்பு அளவைப் பொறுத்து லிட்டருக்கு ரூ.40 முதல் ரூ.47 வரை வழங்குகின்றன. ஆனால், தமிழ்நாடு அரசுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனம் ரூ.35 முதல் ரூ.44 என்ற மிகக்குறைந்த விலைக்கே பாலை கொள்முதல் செய்கிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.7 உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, பால் விற்பனை நிறுத்தப் போராட்டத்தில், பால் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, விவசாயிகள் சாலையிலும், தரையிலும் பாலைக் கொட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பால் உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்களால் ஆவின் பால் விநியோகம் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துதல் சட்டம், விவசாய கடனுக்கான வட்டி விகிதம் உயர்வு என விவசாயிகள் மீது ஒன்றிய அரசு தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழ்நாடு அரசு மறுப்பது, வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.

மாட்டுத் தீவனம் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு, கால்நடைகளை பாரமரிப்பது உள்ளிட்ட காரணங்களால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதனை புரிந்துக் கொண்டு, பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை ஆகும்.

கடந்த பல ஆண்டுகளாகவே பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரி வருகின்றனர். ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 மட்டுமே உயர்த்தியது. மீதமுள்ள 7 ரூபாயை இப்போது உயர்த்தி வழங்க வேண்டும் என்று தான் உற்பத்தியாளர்கள் வலியுறுத்துகின்றனர். பால் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் விவசாயிகளின் போராட்டம் தொடரும் பட்சத்தில், தமிழ்நாடு முழுக்க பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே, இவ்விவகாரத்தில், தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலை ரூ.7 உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x