தமிழகத்தில் அனைத்து பல்கலை.களிலும் ஒரே மாதிரியான நிர்வாகம் அமைத்திட விரைவில் குழு: அமைச்சர் பொன்முடி

சென்னையில் நடந்த பல்கலை. துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் அமைச்சர் பொன்முடி
சென்னையில் நடந்த பல்கலை. துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் அமைச்சர் பொன்முடி
Updated on
1 min read

சென்னை: “தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும், நியமனங்கள், தேர்வுக் கட்டண நிர்ணயம் உட்பட அனைத்திலும் ஒரே மாதிரியான நிர்வாகத்தைக் கொண்டு வருவது தொடர்பாக விரைவில் குழு அமைக்கப்படவுள்ளது" என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் சென்னையில் சனிக்கிழமை, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒவ்வொரு மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்படுவதை மாற்றியமைத்து, அனைத்து பல்கலைக்கழகங்களிலும், பணி நியமனங்கள், தேர்வுக் கட்டணம், என அனைத்தும் ஒரே மாதிரியாக செயல்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக ஒரு குழுவை அமைத்து, வெகு விரைவில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், எழுத்தர்கள், பதிவாளர்கள், ஆலோசகர் பதவிகள் உட்பட இவைகளுக்கு எல்லாம், ஒரே மாதிரியான ஊதியம் கொடுப்பதை பற்றியும், மாணவர்களிடம் இருந்து ஒரே மாதிரியான தேர்வுக் கட்டணம் வசூலிப்பது பற்றியும், ஒரே மாதிரியான நிர்வாகத்தை உருவாக்குவது என்பது பற்றியும் இந்தக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.

பல்கலைக்கழகங்களுக்கு இடையே வேறுபாடு இல்லாமல், ஒரே மாதிரியான நிலையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரு குழு நியமிக்ப்படவிருக்கிறது" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in