Published : 18 Mar 2023 03:19 PM
Last Updated : 18 Mar 2023 03:19 PM

சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம்: மாதவரம் - சிறுசேரி சிப்காட் வழித்தடத்துக்கு அனுமதி

சென்னை மெட்ரோ ரயில் | கோப்புப் படம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்டத்தில், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ரூ.63,246 கோடியில் 118.9 கி.மீ. தொலைவுக்கு நடைபெறுகின்றன. இந்தத் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை (3-வது வழித்தடம்) 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை (4-வது வழித்தடம்) 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (5-வது வழித்தடம்) 47 கி.மீ. தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், மயிலாப்பூரில் 3 நடைமேடைகளுடன் ஆழமான மெட்ரோ ரயில் நிலையம் அமையவுள்ளது. மயிலாப்பூர் நிலையம் 3-வது மற்றும் 4-வது வழித்தடத்துக்கான பரிமாற்ற நிலையமாக இருக்கும். 4 நிலைகளுடன் தரைக்குக் கீழே 35 மீ (115 அடி) ஆழத்தில் இந்த நிலையம் அமையவுள்ளது. இந்த நிலையத்தில் 4 சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் வெவ்வேறு நிலைகளில் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த வழித்தடத்தில் மயிலாப்பூர் (திருமயிலை), இந்திரா நகர், தரமணி உள்ளிட்ட இடங்களில் பக்கிங்காம் கால்வாய் மற்றும் அடையாறு ஆறுகளில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி 1242.19 சதுர மீட்டர் பகுதி கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதியில் வருகிறது. இங்கு பணிகள் மேற்கொள்ள கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணைய அனுமதி பெற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.

இந்நிலையில், மத்திய கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் இதற்கு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ. தொலைவுக்கு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 20 உயர்மட்ட ரயில் நிலையங்கள் மற்றும் 30 சுரங்க ரயில் நிலையங்கள் அமைய உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x