பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்
அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: பள்ளிக்கரணை ராம்சர் ஈரநிலத்தில் கட்டிடக்கழிவுகளைக் கொட்டி ஆக்கிரமிக்கும் சதியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"இராம்சர் ஈரநிலமாக அறிவிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டிடக்கழிவுகள் கொட்டப்படுவதும், அங்கு 40 அடி அகல சாலை அமைக்கப்படுவதும் அதிர்ச்சியளிக்கின்றன. நீர் சூழ்ந்த நிலத்தை மீட்கவே இவ்வாறு செய்யப்படுவதாக தோன்றுகிறது. இது கண்டிக்கத்தக்கது; தண்டிக்கத்தக்கது.

கட்டிடக்கழிவுகள் கொட்டப்படும் நிலம் ஒரு காலத்தில் தரிசு நிலம் என்று குறிப்பிடப்பட்டு ஏழை மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டதாகவும். அந்த நிலம் தான் இப்போது ஆக்கிரமிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கும், இராம்சர் ஒப்பந்தத்திற்கு எதிரானது.

சர்ச்சைக்குரிய நிலத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படக்கூடாது; சட்டவிரோதமாக பெறப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த 2008-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை அளித்துள்ளது. அதற்கு எதிரான செயல்களை அரசு அனுமதிக்கக்கூடாது.

தரிசு நிலம் என்று பட்டா பெறப்பட்டு இதுவரை பயன்படுத்தப்படாத நிலங்களை தமிழக அரசு மீட்டு வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் செய்யப்பட்டுள்ள பிற ஆக்கிரமிப்புகளையும் விரைவாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in