

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக 3 பெண் குழந்தைகள் உட்பட 6 பேருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் இதய சுவரில் இருந்த ஓட்டைகள் அடைக்கப்பட்டன.
பிறவி இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்பகால இதய அறுவை சிகிச்சை அளிப்பதற்காக அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையுடன் இணைந்து சிகிச்சை அளிக்கவும், திருநெல்வேலி, மதுரை, சேலம், கோவை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இதய மருத்துவக் குழுவினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் கடந்த ஜனவரியில் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
அதன்படி, அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் ‘லிட்டில் ஹார்ட்’ அறக்கட்டளையுடன் இணைந்து, கோவை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக 3 பெண் குழந்தைகள் உட்பட 6 பேருக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் இதய சுவரில் இருந்த ஓட்டைகள் நேற்று அடைக்கப்பட்டன.
இதுதொடர்பாக மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது: இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 2.50 லட்சம் குழந்தைகள் இதய குறைபாட்டுடன் பிறக்கின்றனர். இதில், ஐந்தில் ஒருவர் கடுமையான இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய இதய குறைபாடுகளை தேசிய குழந்தை நலத்திட்டம் (ஆர்பிஎஸ்கே) மூலம் முதற்கட்ட பரிசோதனையில் கண்டறிந்து, குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
45 நிமிடங்களில் சிகிச்சை: முன்பு இதுபோன்ற பாதிப்புக்கு திறந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும், 2 வாரங்கள் வரை மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது 45 நிமிடங்களுக்குள் இந்த நவீன சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ‘ஷீத்’ எனப்படும் உறைக்குள் வைத்து மெல்லிய ஊசியானது தொடையில் உள்ள ரத்தநாளம் வழியாக நோயாளிகளின் உடலுக்குள் செலுத்தப்படுகிறது.
அதன் மூலம் சிறிய குடைபோன்ற கருவியை இதயத்தில் ஓட்டை உள்ள இடத்துக்கு எடுத்துச்சென்று இதயத்தின் சுவரில் நுழைத்து, அதனை விரிவடைய செய்து ஓட்டை அடைக்கப்படுகிறது. சிகிச்சை பெற்ற நோயாளி 3 முதல் 4 நாட்களில் வீடு திரும்பலாம்.
தற்போது சிகிச்சை பெற்றவர்களுக்கு 10 மி.மீ முதல் அதிகபட்சம் 30 மி.மீ வரை இதய சுவரில் ஓட்டைகள் இருந்தன. தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சையை மேற்கொள்ள ரூ.3 லட்சம் வரை செலவாகும். இந்நிலையில், 6 நோயாளிகளுக்கும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் இந்த சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தைகள் நல இதயவியல் நிபுணர் சி.எஸ்.முத்துக்குமரன், கோவை அரசு மருத்துவமனையின் இதயவியல் துறை தலைவர் ஜெ.நம்பிராஜன், உதவிப் பேராசிரியர்கள் சக்கரவர்த்தி, ஜெகதீஷ், செந்தில், மயக்கவியல் துறை பேராசிரியர் சண்முகவேல், உதவிப் பேராசிரியர் சதீஸ் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் இந்த சிகிச்சையை மேற்கொண்டனர்.