Published : 13 Jul 2014 12:00 AM
Last Updated : 13 Jul 2014 12:00 AM

வேட்டி அணிந்து சென்ற நீதிபதி, வழக்கறிஞர்களுக்கு கிரிக்கெட் கிளப்பில் அனுமதி மறுப்பு

உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் வேட்டி கட்டியிருந்த காரணத்தால் தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்புக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேட்டியுடன் வருபவர்களை அனுமதிக்கக் கூடாது என்பது கிளப் விதிமுறை. அதனாலேயே அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று கிளப் நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது.

நூல் வெளியீட்டு விழா

சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் உள்ளது. இங்கு சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.எஸ்.அருணாசலம் எழுதிய நூலின் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள உயர் நீதிமன்ற நீதிபதி டி.ஹரி பரந்தாமன் சிவப்பு விளக்கு பொருத்திய தனது அலுவலக காரில் சென்றுள்ளார். வேட்டி அணிந்து சென்றிருந்த அவரை விழா அரங்குக்குள் அனுமதிக்க அங்கிருந்த ஊழியர்கள் மறுத்தனர். ‘‘பேன்ட், சட்டை அணிந்து வருபவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

வேட்டி அணிந்து வந்தால் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்பது கிளப் விதிமுறை’’ என்று கூறிய ஊழியர்கள் அவரை தடுத்து திருப்பி அனுப்பியுள்ளனர். இதேபோல, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.காந்தி, ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோரும் வேட்டி அணிந்து வந்த காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

தமிழரின் கலாச்சார உடை

இதுபற்றி நீதிபதி டி.ஹரி பரந்தாமன் கூறும்போது, ‘‘பாரதி, பாரதிதாசன், பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா உள்ளிட்ட தலைவர்களும் நம் முன்னோர்களும் அணிந்த வேட்டி, தமிழர்களின் கலாச்சார உடை. அதைத்தான் அணிந்து சென்றேன். வேட்டி அணிந்து சென்ற காரணத்துக்காக மதிப்புக்குரிய நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் முன்னர் தடுத்து நிறுத்தப்பட்டார். இப்போது என்னை தடுத்து நிறுத்தியுள்ளனர்’’ என்றார்.

வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியதாவது:

நூல் வெளியீட்டு விழா கிளப்பின் முதல் மாடியில் நடந்தது. அங்கு செல்வதற்காக முன்னாள் நீதிபதி கே.சந்துரு, மூத்த வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, அட்வகேட் ஜெனரல் சோமயாஜி ஆகியோரும் நானும் லிப்ட் அருகே காத்திருந்தோம்.

அப்போது ஒரு பாதுகாவலர் அங்கு வந்தார். என்னை மட்டும் வெளியே போகுமாறு கூறினார். ‘‘ஏன் போகவேண்டும்?’’ என்றேன். ‘‘வேட்டி அணிந்து வருபவர்களுக்கு கிளப்பில் நுழைய அனுமதி கிடையாது’’ என்றார். ‘‘கிளப் உறுப்பினர்களுக்கு வேண்டுமானால் இந்த நிபந்தனை சரியாக வரும். நூல் வெளியீடு என்பது பொது நிகழ்ச்சி. அதில் கலந்துகொள்ள வருபவர்களை இப்படித்தான் வர வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது’’ என்றேன். எனக்காக அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, மூத்த வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி பரிந்து பேசினர். ஆனாலும், பாதுகாவலர் கேட்கவில்லை. என்னை வெளியேறுமாறு கூறினார்.

எனக்குப் பிறகு நீதிபதி டி.ஹரி பரந்தாமன், மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி ஆகியோரையும் வேட்டி அணிந்து வந்த ஒரே காரணத்துக்காக வெளியேற்றியுள்ளனர். நீதிபதி ஹரி பரந்தாமன், நீதிபதிகளுக்கான சுழல் விளக்கு பொருத்திய காரில்தான் வந்துள்ளார். கிளப்பின் முன்அறைக்குச் சென்ற அவரை அங்குள்ள சோபாவில் அமரவைத்து பேசி, வேட்டி கட்டியிருந்த ஒரே காரணத்துக்காக அரங்குக்குள் செல்லவிடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.

சரியான நடைமுறையா?

தமிழர்களின், கலாச்சாரத்தின் அடையாளம் வேட்டி. அதை அணிந்து வரக்கூடாது என்று தடை விதிப்பது கண்டிக்கத்தக்கது. நீதிபதி அருணாசலம் நல்ல மனிதர். எங்களால் அவரது புத்தக விழாவுக்கு சங்கடம் ஏற்படக்கூடாது என்பதாலும், விழாவில் சலசலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதாலும் அங்கு தர்க்கம் செய்ய விரும்பாமல் வந்துவிட்டோம். இருப்பினும், வேட்டி அணிந்து வருபவர்களை அனுமதிக்க மறுப்பது சட்டப்படி சரியான நடைமுறைதானா என்பதை ஆராய வேண்டும்.

இவ்வாறு ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறினார்.

வழக்கு தொடர முடிவு

மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி கூறும்போது, ‘‘பேன்ட்தான் போடவேண்டும். வேட்டி கட்டி வரக்கூடாது என்றெல்லாம் விதி முறைகள் வகுப்பதே சட்ட விரோதமானது. இதை இன்று அனுமதித்தால், மொட்டை அடித்து வருபவர்களை மட்டும் தான் எங்கள் இடத்துக்குள் விடுவோம் என நாளை வேறொரு அமைப்பினர் விதிமுறை வகுக்க நேரிடும். எனவே, வேட்டி அணிந்து வருபவர்களை உள்ளே விடமாட்டோம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் கிளப் வகுத்துள்ள விதிமுறையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்’’ என்றார்.

கிளப் நிர்வாகம் விளக்கம்

இதுதொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் காசி விஸ்வநாதனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

நீதிபதியும் வழக்கறிஞர்களும் தனியார் நடத்திய நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்தபோது திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அது பொது நிகழ்ச்சி அல்ல. மேலும், எங்கள் கிளப்புக்கு என்று சில விதிமுறைகள் உள்ளன. வேட்டி கட்டிக்கொண்டு யாரும் உள்ளே வரக்கூடாது என்பது எங்கள் கிளப் விதிமுறை.

எங்கள் கிளப் இடத்தில் நிகழ்ச்சி நடத்துவோர் என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று, இடத்தைப் பதிவு செய்ய வரும்போதே கூறிவிடுகிறோம். நிகழ்ச்சிக்கு வருபவர்களிடம் உடைக் கட்டுப்பாடு குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்னரே சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் சொல்லாதது அவர்களது தவறுதானே தவிர, எங்கள் தவறு எதுவும் இல்லை.

இவ்வாறு கிரிக்கெட் சங்க செயலாளர் காசி விஸ்வநாதன் கூறினார்.

உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் வேட்டி கட்டியிருந்த ஒரே காரணத்துக்காக கிளப்பில் அனுமதி மறுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்டி கட்டிவந்தால் அனுமதிக்க மாட்டோம் என்று கிளப் நிர்வாகம் திட்டவட்டமாக கூறி யிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x