

சென்னை: ஆவினுக்கு பால் விற்பனை நிறுத்தம்பொதுமக்களை பாதிக்கும் என்பதால் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அன்புமணி: பாலுக்கான உற்பத்திச் செலவுடன் ஒப்பிடும்போது, அதற்கான கொள்முதல் விலை மிகவும் குறைவு என்பதால் பால் கொள்முதல் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்துகின்றனர். இவர்களின் கோரிக்கை நியாயமானதே. மாட்டுத்தீவனம் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் கடந்த சில ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்திருப்பதால் பாலுக்கான உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளது.
அதை ஈடுகட்ட பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டியது அரசின் கடமையாகும். ஆவின் கொள்முதலுக்கான பாலை உற்பத்தியாளர்கள் நிறுத்தினால், முதலில் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இந்த சிக்கலில் தலையிட்டு ஆவின் நிறுவனத்துக்கும், பால் உற்பத்தியாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.
ஜி.கே.வாசன்: பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் காரணமாக ஆவின் பால் கிடைக்காமல், தனியார் நிறுவனப் பாலை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்தில் பொதுமக்கள் உள்ளனர். பால் கொள்முதல் விலை தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டியது அரசின் கடமையாகும். எனவே தமிழக அரசு, பால் கொள்முதல் செய்வதில் பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் விடுத்துள்ள கோரிக்கை நிறைவேறும் வகையில் முடிவு வெளியிட வேண்டும்.
டிடிவி தினகரன்: பால் நிறுத்தப் போராட்டம் காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஆவின் பால் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பால்நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில் மக்களைப் பாதிக்கும் வகையில் பால் விலையை உயர்த்தவும் கூடாது.