Published : 23 Jul 2017 12:13 PM
Last Updated : 23 Jul 2017 12:13 PM

அமைச்சர்களுடன் மோதல் எதிரொலி: கமல்ஹாசன் வீட்டுக்கு திடீர் போலீஸ் பாதுகாப்பு

அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதால் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் அதிக அளவில் ஊழல்கள் நடப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ‘‘பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டக் கூடாது. எது பேசுவதாக இருந்தாலும், அரசியலுக்கு வந்து ஆதாரத்துடன் பேச வேண்டும்’’ என்று அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, ‘தமிழகத்தில் பல்வேறு துறைகளில் நடக்கும் ஊழல்கள் தொடர்பான ஆதாரத்தை அந்தந்த துறை அமைச்சர்களின் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்’ என மக்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார். ஊழல் புகார்களை லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அனுப்புங்கள் என்று தெரிவித்த கமல்ஹாசன், ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தை எப்படி தொடர்பு கொள்வது என்ற விவரத்தையும் வெளியிட்டார்.

இதையடுத்து தமிழக அமைச் சர்களுக்கும் கமல்ஹாசனுக்கும் இடையிலான கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. இதனால் கமலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை போலீஸார் எச்சரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் ஆகியோரின் அறிவுரைப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தி.நகர் துணை ஆணையர் அரவிந்தன், மயிலாப்பூர் துணை ஆணையர் சரவணன் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். 13 போலீஸார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். ரோந்து போலீஸாரும் அப்பகுதி யில் அடிக்கடி சுற்றி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x