Published : 18 Mar 2023 06:52 AM
Last Updated : 18 Mar 2023 06:52 AM
ஆவடி: திருவள்ளூர் மாவட்டநிர்வாகம், பபாசியுடன் இணைந்து நடத்தும் ஆவடி புத்தக காட்சிநேற்று தொடங்கியது. இதனை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கிவைத்தார். சுமார் 100 அரங்குகள் மற்றும் 10 ஆயிரம் தலைப்பிலான புத்தகங்களுடன் வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி, மாவட்டம் தோறும் புத்தக காட்சி நடந்து வருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து திருவள்ளூரில் கடந்த ஆண்டு புத்தக காட்சியை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு ஆவடி எச்.வி.எப்.மைதானத்தில் புத்தக காட்சிநேற்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் தொடக்க விழாநடந்தது. இதில் ஆவடி மாநகராட்சி ஆணையர் க.தர்ப்பகராஜ், திருவள்ளூர் எம்.பி. கே.ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, துரை.சந்திரசேகர், பபாசி தலைவர் வைரவன், செயலர் எஸ்.கே.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இப்புத்தக காட்சி, வரும் 27-ம்தேதி வரை 11 நாட்களுக்கு நடைபெற உள்ளது. 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும்,இந்த வளாகத்தில் பல்வேறுஅரசு துறைகள் சார்பில் காட்சிஅரங்குகள், விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும். மாலை நேரங்களில் பட்டிமன்றம், கவியரங்கம் என பல்வேறுநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
இதில் பல்வேறு துறைகளின் பிரபலங்களான பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், பாரதி கிருஷ்ணகுமார், சுகி.சிவம், சு.வெங்கடேசன் எம்.பி., பேராசிரியர் பர்வின் சுல்தானா, கோபிநாத், எஸ்.ராஜா,மருத்துவர் கு.சிவராமன், ஈரோடுமகேஷ் உரையாற்ற உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT