பாக் ஜலசந்தியை குறைந்த நேரத்தில் நீந்தி புனே கல்லூரி மாணவர் சாதனை
ராமேசுவரம்: மகராஷ்டிரா மாநிலம் புனே மாநகராட்சியில் பணிபுரியும் ரமேஷ் வாமன்ராவ் ஷெலர் மகன் சம்பன்னா (21) கல்லூரி மாணவரான இவர் இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை உள்ள பாக் ஜலசந்தி கடற்பரப்பை நீந்தி கடக்க முடிவுசெய்தார். இதற்காக இந்திய, இலங்கை அரசுகளிடம் அனுமதி கோரியிருந்தார்.
இரு நாட்டு அனுமதி கிடைத்த நிலையில் புதன்கிழமை பிற்பகல் தனுஷ்கோடியிலிருந்து இரு படகுகள் மூலம் தனது குழுவினருடன் தலைமன்னார் புறப்பட்டுச் சென்றார்.
வியாழக்கிழமை அதிகாலை 6 மணிக்கு தலைமன்னாரிலிருந்து நீந்தத் தொடங்கி 11.30 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனையை வந்தடைந்தார். சுமார் 30 கி.மீ பாக் ஜலசந்தி கடற்பரப்பை நீந்திக் கடக்க 5 மணி நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டார்.
இதன் மூலம் 29.03.2022 அன்று தேனி பள்ளி மாணவர் சிநேகன் 7 மணி நேரம் 55 நிமிடத்தில் நீந்திக் கடந்ததைவிட குறைந்த நேரத்தில் பாக் ஜலசந்தியை நீந்தி கடந்து புதிய சாதனையை சம்பன்னா படைத்துள்ளார்.
இதை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பார் வையாளர் ராஜேஷ் சம்மந்தம் உறுதி செய்தார்.
