ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

மேஜர் ஜெயந்த் | கோப்புப்படம்
மேஜர் ஜெயந்த் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: அருணாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த்தின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வியாழக்கிழமை (16.03.2023) அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் ராணுவ பணியில் ஈடுபட்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ அலுவலர் மேஜர்.A. ஜெயந்த் உட்பட இரண்டு ராணுவ அலுவலர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்து வெள்ளிக்கிழணை காலை என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தேன்.

மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை, நேரில் சென்று, தாய்நாட்டைக் காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து, வீரமரணமெய்திய ராணுவ வீரரின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக அஞ்சலி செலுத்திட அறிவுறுத்தினேன்.

தாய்நாடு காக்கும் பணியின்போது இன்னுயிர் ஈந்த மேஜர். A. ஜெயந்தின் குடும்பத்தினருக்கு மீண்டும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களுக்கு ரூபாய் இருபது லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்”என்று அதில் கூறியுள்ளார்.

முன்னதாக, அருணாச்சலப் பிரதேசம், மாண்டல பகுதியில் நேற்று (மார்ச் 16) நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த் மரணம் அடைந்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், "அருணாசலப் பிரதேச மாநிலத்தில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில், தமிழகத்தின் தேனி மாவட்டம், ஜெயமங்கலத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் ஜெயந்த் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இராணுவ வீரர் மேஜர் ஜெயந்துக்கு எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன். அவரது பிரிவால் வாடும் சக இராணுவ வீரர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in