‘மனித வெடிகுண்டாக...’ - ஆர்.பி.உதயகுமாருக்கு எதிரான ஓபிஎஸ் அணியினரின் சுவரொட்டிகளால் திருப்பூரில் பரபரப்பு

‘மனித வெடிகுண்டாக...’ - ஆர்.பி.உதயகுமாருக்கு எதிரான ஓபிஎஸ் அணியினரின் சுவரொட்டிகளால் திருப்பூரில் பரபரப்பு
Updated on
1 min read

திருப்பூர்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக திருப்பூரில் ஓபிஎஸ் அணியினர் ஒட்டிய சுவரொட்டிகளால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

மதுரை விமான நிலையம் சம்பவம் தொடர்பாக முன்னாள் முதல்வர் பழனிசாமி மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசும்போது, “மதுரை தொண்டர்கள் சிறைக்கு செல்ல பயந்தவர்கள் அல்ல. நாங்கள் பல சிறைகளை பார்த்தவர்கள். எங்களிடம் பூச்சாண்டி காட்ட வேண்டாம். அதிமுக எதற்கும் அஞ்சாது. பழனிசாமி மீது பொய் வழக்கு பதியும் இது போன்ற சர்வாதிகார போக்கு தொடர்ந்தால், மதுரையில் அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம்” என்று பேசினார்.

இந்த நிலையில், இவரது பேச்சை ஒட்டி, திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், “கைது செய் கைது செய், தமிழக அரசே, மனிதவெடிகுண்டு கலாச்சாரத்தை தூண்டும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ.வை கைது செய். மத்திய அரசு தேசிய புலனாய்வு முகமை விசாரணையை தொடங்க வேண்டும். மனித வெடிகுண்டு என பொதுமேடையில் முழங்கியவரை, தீவிர விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வி.எம்.சண்முகம், துணை செயலாளர் கனிஷ்கா சிவக்குமார் ஆகியோரின் பெயர்கள் சுவரொட்டியில் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வி.எம்.சண்முகம் கூறியதாவது: “ முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அப்படி பேசியது தவறு. அதனை கண்டிக்கும் வகையில் திருப்பூர் மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி மற்றும் காங்கயம் ஆகிய 5 தொகுதிகளிலும் பரவாலாகவும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இந்த சுவரொட்டி ஒட்டி உள்ளோம். அவர் பேசியது முழுக்க தவறு.

அதிமுக தொண்டர்கள் மனித வெடிகுண்டாக மாறுவார்கள் என்று சொல்வதை கண்டிக்கும் வகையிலேயே இந்தச் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளோம். அரசியல் களத்தில் இருப்பவர்கள் தங்களது நிலை மறந்து பேசக்கூடாது” என்று அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in