

புதுக்கோட்டை: “இதுதான் திராவிட மாடல் ஆட்சி. திமுகவினரே காவல் நிலையத்துக்குள் சென்று தாக்குகிறார்கள்” என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் இன்று (மார்ச் 17) நடைபெற்ற கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் பால் விலை கட்டுபடியாகவில்லை என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கும், பால் தட்டுப்பாட்டை போக்கவும் பால் வளத்துறை அமைச்சர் நாசர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டுவது நல்லதல்ல. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணாவிட்டால் தேமுதிக போராட்டத்தில் இறங்கும்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவோம் என்று கூறியது திமுக. ஆட்சிக்கு வந்து இத்தனை மாதங்களாகியும் அதை நிறைவேற்ற வில்லை. விலக்குப் பெற முடியாதென தெரிந்தும் கூட அதை வைத்து திமுக அரசியல் செய்தது. அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு கட்டிடத்துக்கு அனிதாவின் பெயரை வைத்தால் நீட் பிரச்சினை தீர்ந்துவிடுமா? இதை வைத்து அரசியல் செய்வதை தவிர்த்துவிட்டு நிலையான உத்தரவாதத்தை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தமிழக அரசு தர வேண்டும்.
ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பயந்து எத்தனையோ கட்சிகள் ஒதுங்கியபோது, தைரியமாக களத்தை தேமுதிக எதிர்கொண்டது. நேர்மையான முறையில் வாக்காளர்களை சந்தித்தோம். ஆனால், ஈரோடு இடைத் தேர்தலில் ஆடு, மாடுகளை பட்டியில் அடைப்பது போன்று மக்கள் அடைத்து வைக்கப்பட்டார்கள். பல கோடி ரூபாயை செலவு செய்து ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெறச் செய்துள்ளார்கள். அவருக்கு தற்போது உடல்நிலை சரியில்லை என்றதும் எனக்கே வருத்தமாக இருந்தது” என்றார்.
திருச்சியில் திமுகவினர் மோதிக் கொண்டது குறித்து பதிலளித்த அவர், “இதுதான் திராவிட மாடல் ஆட்சி. திமுகவினரே காவல் நிலையத்துக்குள் சென்று தாக்குகிறார்கள். திருவாரூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையின்போது அதேக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்குமா என்பதற்கு ஸ்டாலின்தான் பதில் சொல்ல வேண்டும்.
அனைத்து அமைச்சர்களும் மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு நடந்துகொள்கிறார்கள். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சங்கிலிப் பறிப்பு, கொலை - கொள்ளை சம்பவம் அதிகமாக நடக்கிறது. இதை இரும்புக் கரம் கண்டு அடக்க வேண்டும். முதலில் தங்களது கட்சியினரை கட்டுப்பாட்டுக்குள் திமுக தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2009-ல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளன்று 100-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ரூ.10,000 வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டது. இத்திட்டத்தை, புதுச்சேரி அரசு முன்னுதாரணமாக அறிவித்துள்ளது. இதேபோன்று, வீடு தேடி ரேஷன் பொருள் வழங்குவோம் என்று தேமுதிக வாக்குறுதி அளித்ததையும் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தமிழ் மொழி தேர்வுக்கு 50 ஆயிரம் மாணவர்கள் செல்லாதது தமிழர்களுக்கு அவமானம். தேர்வு மீது அவர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருவதாக தெரிகிறது. இது குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்த தேர்வில் 100 சதவீதம் பேர் தேர்வு எழுத வேண்டும். இதேபோன்று ஈரோடு இடைத்தேர்தலில் 75 சதவீதம்தான் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஒவ்வொரு தேர்தலிலும் 100 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வில்லை. இதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.வாக்குக்கு பணம் கொடுப்போருக்கு வாக்களிக்கும் போக்கு மாற வேண்டும்” என்று பிரேமலதா கூறினார்.