அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டன. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சிடி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் அணி எம்எல்ஏ. மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இபிஎஸ் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில், இபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கட்சி விதிகள் திருத்தம், இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு குறித்த தீர்மானங்களால் மனுதாரர் எந்த பாதிப்புக்கும் ஆளாகவில்லை என்பதால் எந்த நிவாரணமும் கோர முடியாது. எனவே, பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து எட்டு மாதங்களுக்குப்பின் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு செல்லாததாகிவிட்டது. எனவே, வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர்களான, வைத்தியலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்குகள், நீதிபதி குமரேஷ் பாபு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில், "கட்சி சட்ட விதிகளை பின்பற்றாமல் தங்களை நீக்கியுள்ளனர். விதிகளின்படி தங்கள் தரப்பு விளக்கம் கேட்காமல் சர்வாதிகார போக்குடன் செயல்பட்டுள்ளனர். இருவரையும் கட்சியில் இருந்து நீக்கம் செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது.

மேலும், வரும் 20ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில், இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்ற தங்களை கட்சி சாராத உறுப்பினராக கருதாமல், அதிமுக எம்எல்ஏக்களாகவே அங்கீகரிக்க வேண்டும். இதுதொடர்பாக, சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியும், எந்த பதிலும் இல்லை என்று வாதிடப்பட்டது.

அப்போது மனோஜ் பாண்டியன் தரப்பில், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்காத நிலையில், இடைக்கால பொதுச்செயலாளர் என பதில்மனு தாக்கல் செய்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், ஜூலை 11-ம் தேதியன்று நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டதை சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூலை 11ம் தேதி தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்துள்ள உயர் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, அது தொடர்பாக வைத்தியலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் பதிலளிக்கவும், இபிஎஸ் தாக்கல் செய்துள்ள பதில் மனுவுக்கு மனோஜ்பாண்டியன் பதிலளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in