Published : 17 Mar 2023 01:19 PM
Last Updated : 17 Mar 2023 01:19 PM

ரேசன் கடைகளில் 6,500 காலி பணியிடங்கள் | விரைவில் பணி ஆணை வழங்கப்படும்: அமைச்சர் பெரியகருப்பன்

ரேசன் கடையை திறந்து வைத்த அமைச்சர் பெரிய கருப்பன்

சென்னை: ரேசன் கடைகளில் காலியாக உள்ள 6,500 பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் பணிஆணை வழங்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

சென்னை, கொத்தவால்சாவடி, தாத்தா முத்தையப்பன் தெருவில் வ.உ. சிதம்பரனார் கூட்டுறவு பண்டகசாலையின் புதிய நியாயவிலைக் கடையினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று (மார்ச் 17) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர், "தமிழகத்தில் கூட்டுறவுத்துறை மக்களுக்கு முக்கிய சேவைகளை அளித்து வருகின்றது. அரசின் சார்பில் கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தரமாகவும், தங்குதடையின்றியும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

மொத்தம் 35,941 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 3,516 நியாயவிலைக்கடைகள் சொந்த கட்டிடங்களிலும், 24,179 நியாயவிலைக்கடைகள் வாடகை இன்றி பொது கட்டிடங்களிலும், 7,952 நியாயவிலைக் கடைகள் வாடகை கட்டிடங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இதில் வ.உ. சிதம்பரனார் கூட்டுறவு பண்டகசாலைக்கு சொந்தமான நியாயவிலைக்கடை வாடகை கட்டிடத்தில் ரூ.12,000 வாடகைக்கு செயல்பட்டு வந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் முயற்சியாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பாலும் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.2,000 மாத வாடகையில் புதிய நியாயவிலைக் கடை இன்று தொடங்கப்பட்டுள்ளது.

நியாயவிலைக் கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தங்கு தடையின்றி வழங்குவதற்கும், பொதுமக்கள் காத்திருக்காமல் இருக்கவும் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி மினி சூப்பர் மார்க்கெட் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு நியாயவிலைக் கடையில் உள்ள 6,500 காலிபணியிடங்களை நிரப்புவதற்கு நேர்முகத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு தற்போது மதிப்பீடு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகுதியுள்ள பணியாளர்களுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்படும்" என தெரிவித்தார்.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x