மாணவர்களுக்கு வாரத்துக்கு ஒரு சத்து மாத்திரை - பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

மாணவர்களுக்கு வாரத்துக்கு ஒரு சத்து மாத்திரை - பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்து மாத்திரையை ஆசிரியர் முன்னிலையில் மட்டுமே உட்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 58,339 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 78 லட்சம் மாணவர்களுக்கு இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் சத்து மாத்திரைகள் வாரத்துக்கு ஒன்று வீதம் 52 வாரங்களுக்கு விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவற்றை மொத்தமாக விநியோகித்ததன் விளைவாக நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் பலியான விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை ஆணையர் மற்றும் மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை பொது சுகாதாரத் துறைஇயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம் வழங்கியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 400 மில்லி கிராம் திறன் கொண்ட மாத்திரைகளும், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள மாணவர்களுக்கு 500 மில்லி கிராம் அளவிலான சத்து மாத்திரைகளும் வழங்க வேண்டும்.

இதற்காக பள்ளிகளில் ஒருங்கிணைப்பு அலுவலர் அல்லது ஆசிரியரை பிரத்யேகமாக நியமித்தல் வேண்டும். வாரத்துக்கு ஒரு மாத்திரை மட்டுமே வழங்க வேண்டும். அதுவும் ஒருங்கிணைப்பு அலுவலர் அல்லது ஆசிரியர் முன்னிலையில் உட்கொள்ளச் செய்வது அவசியம்.

காய்ச்சல், மயக்கம், வாந்தி உள்ளிட்ட பாதிப்புகள் உள்ள மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்கத் தேவையில்லை. சத்துமாத்திரைகள் வழங்கிய விவரங்களையும், விடுபட்ட மாணவர்களின் விவரங்களையும் மாவட்ட வாரியாக சேகரித்து வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் பொது சுகாதாரத் துறைக்கு கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in