பிரதமர் குறித்து அவதூறு இ-மெயில்: தஞ்சாவூர் இளைஞரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

விக்டர் ஜேம்ஸ் ராஜா - பிரதமர் மோடி
விக்டர் ஜேம்ஸ் ராஜா - பிரதமர் மோடி
Updated on
1 min read

தஞ்சாவூர்: பிரதமர் மோடி குறித்து, அவரது அலுவலகத்துக்கு அவதூறாக இ-மெயில் அனுப்பிய தஞ்சாவூர் இளைஞரிடம், சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகேயுள்ள பூண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா(35). எம்.காம். பட்டதாரி. சூழலியல் சுற்றுலா தொடர்பாக முனைவர் பட்டத்துக்கான (பிஎச்.டி.) ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன், பிரதமர் மோடி குறித்து, அவரது அலுவலக இ-மெயில் முகவரிக்கு விக்டர் ஜேம்ஸ் ராஜா அவதூறான கருத்தை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சிபிஐ அதிகாரி சஞ்சய் கவுதம் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு பூண்டித்தோப்பு கிராமத்துக்குச் சென்று, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த விக்டர் ஜேம்ஸ் ராஜாவை எழுப்பி, சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.

பின்னர், அவரை காரில் தஞ்சாவூர் அழைத்து வந்து, மத்திய அரசுக்குச் சொந்தமான ஓர் அலுவலகத்தில் வைத்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டாவது நாளாக நேற்றும் விசாரணை நடைபெற்றது.

இதுகுறித்து விக்டர் ஜேம்ஸ் ராஜாவின் தந்தை ஜெயபால், தாய் மணி ஆகியோர் கூறும்போது, "எங்கள் மகன் எந்த தவறும் செய்திருக்க மாட்டார். விசாரணை நடத்தும் இடத்தில் எங்கள் மகனைப் பார்க்க சிபிஐ அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக மனித உரிமை ஆணையத்துக்கு இ-மெயில் மூலம் புகார் மனு அனுப்பி உள்ளோம்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in