Published : 17 Mar 2023 06:53 AM
Last Updated : 17 Mar 2023 06:53 AM

மனோஜ் பாண்டியன் வழக்கு செல்லாததாகி விட்டது: இபிஎஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து 8 மாதங்களாகிவிட்டதால், இது தொடர்பாக மனோஜ் பாண்டியன் தொடர்ந்துள்ள வழக்கு செல்லாததாகி விட்டது. எனவே, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் இபிஎஸ் சார்பில், உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதிநடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்தும், இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமியை நியமித்தும், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, இது தொடர்பாக இபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுகவில் தற்போது இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற பதவியே பிரதானமாக உள்ளது. ஆனால், பிரதிவாதிகளாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை மனுதாரர் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள மனோஜ் பாண்டியன் தற்போது கட்சி உறுப்பினர் கிடையாது.

கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதிநடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியில் மீண்டும் ஒற்றைத் தலைமை கொண்டுவர வேண்டும் என்று அனைத்து மாவட்டச் செயலாளர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச் செயலாளராக என்னை பொதுக்குழு உறுப்பினர்கள் முறைப்படி தேர்வு செய்து செய்தனர். ஒருங்கிணைப்பாளர், இணைஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு, ஓபிஎஸ் தரப்பினர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அந்த தீர்மானங்கள் முறைப்படி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கட்சியின் வரவு-செலவு கணக்கு விவரங்கள் தொடர்பாக இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்றதேர்தல் ஆணையம், அதை இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது.

மேலும், டெல்லியில் நடந்த ஜி20மாநாடு தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க, இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் மத்திய அரசு எனக்கு அழைப்பு விடுத்தது. மத்திய அரசின் சட்டஆணையமும் என்னை அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செய லாளராக அங்கீகரித்துள்ளது.

கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக நான் பதவியேற்ற பிறகு, கட்சியின் பொருளாளர், தலைமைக் கழகச் செயலாளர் உள்ளிட்டோரை நியமித்துள்ளேன். கலைக்கப்பட்ட பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்து,ஒற்றைத் தலைமையை அதிமுகவில் ஏற்படுத்துவது என்பது தொண்டர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பம். வழக்கமாக தனிப்பட்ட சங்க விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடாது என்பதால், உட்கட்சி தொடர்பான இந்தவிஷயத்திலும் நீதிமன்றம் தலையிடும்படி மனுதாரர் கோர முடியாது.

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால், மனுதாரர் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பெரும்பான்மையானவர்களின் முடிவை சிறுபான்மையாக உள்ளவர்கள் முடக்க முடியாது. கட்சி விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவுக்கு மட்டுமேஅதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தை மனுதாரர் கேள்வி எழுப்ப முடியாது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இனி இணைந்து செயல்பட முடியாது என்ற வாதத்தை நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ள நிலையில், கட்சியில் இருந்து தன்னை நீக்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று மனு தாரர் கூற முடியாது.

கட்சி விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தால் மனுதாரருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால், அவர் எந்த நிவாரணமும் கோர முடியாது. குறிப்பாக, பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து 8 மாதங்களாகி விட்ட நிலையில், மனுதாரர் தொடர்ந்துள்ள இந்த வழக்கு செல்லாததாகி விட்டது. எனவே, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (மார்ச் 17) மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x