தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு - தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த மத்திய அரசு அறிவுரை

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு - தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த மத்திய அரசு அறிவுரை
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும்நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மத்தியசுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ப.செந்தில்குமாருக்கு, அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கடந்த சில நாட்களாக தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. நாட்டில் மார்ச்முதல் வாரத்தில் 2,082 எனபதிவான மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை, அதற்கடுத்த வாரத்தில் 3,264-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தொற்று பாதிப்பு 170-லிருந்து, 258-ஆக அதிகரித்துள்ளது. கரோனாபரிசோதனை செய்யப்பட்டவர்களில் 1.99 சதவீதம் பேருக்குதொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக, சேலம், நீலகிரி,திருப்பூர், திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் பாதிப்பு இரண்டு மடங் காக அதிகரித்துள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் தீவிர கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும். நோயாளிகளைக் கண்டறிதல், பரிசோதித்தல், சிகிச்சை அளித்தல் மற்றும் தடுப்பூசி போடுதல் என அனைத்து நிலைகளிலும் கரோனா தடுப்புப் பணிகளை தமிழக அரசு விரிவுபடுத்த வேண்டும்.

இன்ஃப்ளூயன்சா வகை காய்ச்சல் அல்லது தீவிர நுரையீரல் தொற்று காய்ச்சல் பாதிப்புகளை மருத்துவ முகாம்கள் மூலம் கண்டறிந்து, பரவாமல் கட்டுப்படுத்துவது முக்கியமாகும். மேலும், கரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகள், வெளிநாடுகளில் இருந்து வந்து தொற்றுக்குஉள்ளானவர்களின் சளி மாதிரிகளை மரபணுப் பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முன்னெடுக்கும் பணிகளுக்கு, மத்தியஅரசு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in