Published : 17 Mar 2023 07:09 AM
Last Updated : 17 Mar 2023 07:09 AM
சென்னை: மாமல்லபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை ரூ.24,435 கோடியில் 4 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப் படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திருவான்மியூர் முதல்கன்னியாகுமரி வரை கடற்கரையை ஒட்டி கிழக்கு கடற்கரை சாலை செல்கிறது. இதில் திருவான்மியூர் முதல்மாமல்லபுரம் வரையிலான பகுதி தமிழக நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாமல்லபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலையின் 697 கிமீ பகுதி தேசிய நெடுஞ்சாலை அணையத்தின் கீழ் வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை எம்பிக்களான, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திமுகவின் எம்.சண்முகம் ஆகியோர், கிழக்கு கடற்கரை சாலைவிரிவாக்கம் தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது பதிலில், ‘‘மாமல்லபுரம் முதல் கன்னியாகுமரி வரை 4 வழிப்பாதையாக இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படும். இதற்காக ரூ.24,435 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், இணைப்பு சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாலங்கள் உள்ளிட்டவை எங்கு தேவையோ அவை விரிவான திட்ட அறிக்கை அடிப்படையில் வாகனம் மற்றும் பாதசாரிகளின் தேவைக்கேற்ப உருவாக்கப்படும்’’ என்றார்.
இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்ததாவது: கிழக்கு கடற்கரை சாலைப்பணிகளை, 8 பிரிவுகளாகப் பிரித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரி முதல் கடலூர் மாவட்டம் பூண்டியான்குப்பம் வரையிலான 38 கிமீ தூரத்துக்கான பணிகளை இந்த ஆண்டு நவம்பருக்குள் முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த பகுதியில் 42 சதவீதம் பணிகள் கடந்த பிப்ரவரி மாதத்திலேயே முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், மாமல்லபுரம் - முகையூர்இடையேயான 31 கிமீ தொலைவு பணிகள் அடுத்தாண்டு மே மாதம் முடிவுறும் எனத் தெரிகிறது. பூண்டியான்குப்பம் - சாத்தான்குப்பம் - நாகப்பட்டினம் இடையேயான 113 கிமீ தொலைவு பணிகள் விரைவில் தொடங்கப்படும். இதனிடனேயே முகையூர் - மரக்காணம் இடையேயான 31 கிமீ தொலைவு பணிகளுக்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதவிர, மரக்காணம் - புதுச்சேரிஇடையேயான 46 கிமீ தொலைவுக்கான திட்ட அறிக்கை தயாரிக்க தேசியநெடுஞ்சாலை ஆணையம் ஒப்பந்தம் கோரியுள்ளது. இப்பகுதிக்கு அடுத்தாண்டில் நில எடுப்பு முடிக்கப்பட்டு தேவையான ஒப்புதல்கள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர, தூத்துக்குடி - திருச்செந்தூர் - கன்னியாகுமரி இடையேயான கிழக்கு கடற்கரை சாலைக்கான பணிகளை தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தத்தையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்கடந்த ஜனவரியில் போட்டுள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT