வடமாநில தொழிலாளர் குடிசைக்கு தீ வைப்பு: நாமக்கல் அருகே போலீஸ் குவிப்பு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வி.புதுப்பாளையத்தில் உள்ள வெல்ல உற்பத்தி ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து ஆட்சியர் ஸ்ரேயா சிங், கேட்டறிந்தார். உடன் எஸ்.பி. கலைச்செல்வன் உள்ளிட்டோர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வி.புதுப்பாளையத்தில் உள்ள வெல்ல உற்பத்தி ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து ஆட்சியர் ஸ்ரேயா சிங், கேட்டறிந்தார். உடன் எஸ்.பி. கலைச்செல்வன் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

நாமக்கல்: நாமக்கல் அருகே வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில், 8 குடிசைகள் முழுமையாக எரிந்து சேதம் அடைந்தன.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் கரப்பாளையம் கிராமத்தில் வெல்ல உற்பத்தி ஆலைகள் உள்ளன. இங்கு வடமாநில தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் மாலை சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான வெல்ல ஆலையின் ஒருபகுதியில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகள் மற்றும் அருகே இருந்த 2 ஆலைகளின் குடிசைகளில் மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

இதில், சக்திவேல் ஆலையிலிருந்த 8 குடிசைகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. குடிசைகளில் தொழிலாளர்கள் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

ஆட்சியர், எஸ்.பி. விசாரணை: தகவல் அறிந்து அங்கு சென்ற ஆட்சியர் ஸ்ரேயா சிங், எஸ்.பி. கலைச்செல்வன் ஆகியோர் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தனர். மேலும், அசம்பாவிதம் தவிர்க்க அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்து தொடர்பாக ஜேடர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரப்பாளையம் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் சமீபத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்துக்கு வெளி மாநிலத்தவர்களே காரணம் என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த தீவைப்பு சம்பவம் நடந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in