Published : 17 Mar 2023 06:51 AM
Last Updated : 17 Mar 2023 06:51 AM
சென்னை: மின் கட்டணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தாதவர்களால், வாரியத்துக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
கடந்த 10-ம் தேதி தாழ்வழுத்தப்பிரிவில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தைத் தாண்டி 10 நாட்களாகியும் 44,732 பேர் கட்டணம் செலுத்தாதது கண்டறியப்பட்டது. குறிப்பாக, வீட்டுப் பயன்பாட்டுக்கான மின்இணைப்பின் கீழ் 44,715 பேர் மின் கட்டணம் செலுத்தாதது தெரியவந்துள்ளது. அவர்கள் ரூ.30.91 கோடி நிலுவை வைத்துள்ளனர்.
அதிகபட்சமாக சென்னை தெற்கு-2 வட்டத்தைச் சேர்ந்த 10,540பேர், ரூ.5.85 கோடி செலுத்த வேண்டியுள்ளது. இதேபோல, வணிகப் பிரிவில் 17 பேர் ரூ.1.53 கோடி மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். அதிகபட்சமாக திருநெல்வேலி பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த 2 பேர், ரூ.1.38 கோடி நிலுவைத் தொகை செலுத்த வேண்டியுள்ளது.
இவ்வாறு மின் கட்டணம் செலுத்தாமல் இருப்போரில், அரசு அலுவலகங்கள் தவிர்த்து, மற்ற அனைத்து நுகர்வோரின் இணைப்பையும் துண்டிக்க வேண்டும்என வாரியத்தின் வருவாய்ப் பிரிவு தலைமை நிதிக்கட்டுப்பாட்டாளர் உத்தரவிட்டுள்ளார். அரசு அலுவலகங்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், அதிக அளவு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் பிரிவுகளான தற்காலிக இணைப்பு, வணிகம்,தொழிற்சாலை உள்ளிட்டவற்றின் கீழ் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்பை முதலில் துண்டிக்குமாறு களப் பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமின்றி பிரிவு வாரியாக மின் கட்டணம் செலுத்தாதவர்கள் தொடர்பாக வாரந்தோறும் ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை எடுப்பதன் மூலம் வருவாயை முறைப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றுமின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT