

சென்னை: அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுக்கப்பட்ட 118 ஆவணங்களை ஒப்படைக்கக்கோரி இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, சிபிசிஐடி போலீஸார் பதிலளிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு ஜூலை 11 அன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்ற போது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு சென்றதால் இருதரப்பிலும் கலவரம் ஏற்பட்டது.
ஓபிஎஸ் மீது புகார்: அப்போது முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் தரப்பினர் எடுத்துச்சென்றதாக அதிமுக தலைமைக் கழகம் சார்பில் ராயப்பேட்டை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரி்ல் சிபிசிஐடி போலீஸார் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களிடம் திருப்பி அளித்த அதிமுக கட்சி அலுவலகம் மற்றும் வாகனங்கள் தொடர்பான 118 ஆவணங்களை சிபிசிஐடி போலீஸார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
இந்த 118 ஆவணங்களை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி இபிஎஸ் தரப்பில் சைதாப்பேட்டை 11-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 23-க்கு தள்ளி வைத்துள்ளது.