Published : 17 Mar 2023 06:05 AM
Last Updated : 17 Mar 2023 06:05 AM
சென்னை: மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் 6 மாநகராட்சிகள் மற்றும் 10 நகராட்சிகளில், ஆற்றல் திறன் கொண்ட தெருவிளக்குகளை அமைக்கும் பணிகளுக்கு ரூ.85.22 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், ஆற்றல்திறன் கொண்ட புதிய தெருவிளக்குகளை அமைக்கும் பணிக்காக 6 மாநகராட்சிகளுக்கு ரூ.64.81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஆவடி மாநகராட்சிக்கு ரூ.7.91 கோடி மதிப்பில், 4,445 புதிய விளக்குகளும், கடலூர்மாநகராட்சிக்கு ரூ.1.88 கோடியில் 1,287 புதிய விளக்குகளும், தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ.6.48 கோடியில் 3,634 புதிய விளக்குகளும், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு ரூ.19.34 கோடியில் 7,701 புதிய விளக்குகளும் அமைக்கப்பட உள்ளன.
மதுரை மாநகராட்சிக்கு ரூ.15.23கோடியில் 10,329 புதிய விளக்குகளும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு ரூ.13.97 கோடி 6,264 புதிய விளக்குகளும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 10 நகராட்சிகளில் வழக்கமான தெருவிளக்குகளை ஆற்றல்திறன் கொண்ட விளக்குகளாக மாற்றியமைக்கும் பணிக்காக ரூ.20.41 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், திருநின்றவூர் நகராட்சிக்கு ரூ.2.95 கோடியில் 3,297, வடலூர் நகராட்சிக்கு ரூ.3.05 கோடியில் 2,809, இடங்கணசாலை நகராட்சிக்கு ரூ.2.62கோடியில் 839, தாரமங்கலம் நகராட்சிக்கு ரூ.1.79 கோடியில் 1,477, லால்குடிக்கு ரூ.1.27கோடியி்ல் 1,871, முசிறி நகராட்சிக்கு ரூ.84 லட்சத்தில் 821, கருமத்தம்பட்டி நகராட்சிக்கு ரூ.3.01 கோடியில் 1,914 விளக்குகளும் அமைக்கப்பட உள்ளன.
காரமடை நகராட்சிக்கு ரூ.1.06 கோடியில் 2,097, கோயம்புத்தூர் மாவட்டம், கூடலூர் நகராட்சிக்கு ரூ.1.35 கோடியில் 935, களக்காடு நகராட்சிக்கு ரூ.2.47 கோடியில் 1,644 விளக்குகளும், ஆற்றல் திறன் கொண்ட விளக்குகளாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 33,660 புதியஆற்றல் திறன்கொண்ட விளக்குகள் மற்றும் 17,704 வழக்கமான தெரு விளக்குகள், ஆற்றல் திறன் கொண்ட தெரு விளக்குகளாக மாற்றப்படவும் உள்ளது.
இந்த ஆற்றல் திறன்கொண்ட விளக்குகளின் மின் நுகர்வு, வழக்கமான விளக்குகளுடன் ஒப்பிடும்போது 40 சதவீதம் வரை குறைவாக இருக்கும். இதன் மூலம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.4.29 கோடி கோடி நிதி சேமிப்பு இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT