

சென்னை: கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி அமைச்சர் நாசருடன் பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தினர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பால்வளத் துறை அமைச்சர் நாசரை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தினர் நேற்று சந்தித்து, கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தமிழக பால் உற்பத்தியாளர் நலச்சங்க பொதுச்செயலாளர் எம்.ஜி.ராஜேந்திரன் கூறியதாவது: ஆவின்பால் கொள்முதல் 36 லட்சம் லிட்டரில் இருந்து தற்போது 27 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. நுகர்வோருக்கு தரமான பால் வழங்கமுடியாத நிலை உள்ளது.
இதற்குகாரணம் தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் ஆவின் நிறுவனத்தைவிட லிட்டருக்கு ரூ.6 முதல் ரூ.12 வரை உயர்த்தி கொடுப்பதால், கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் தனியாருக்கு பால் கொடுக்க முடிவுசெய்துவிட்டனர்.
எனவே, பசும்பாலுக்கு ரூ.20சேர்த்து ரூ.55 ஆகவும், எருமைபாலுக்கு ரூ.24 சேர்த்து ரூ.68 ஆகவும் கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தினோம். இதை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார் என்றார்.
இதனிடையே, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் ஒரு பிரிவாக செயல்பட்டு வரும் ஆர்.ராஜேந்திரன் கூறும்போது, ‘‘அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
எனவே, திட்டமிட்டபடி பால் நிறுத்தப் போராட்டம் நாளைமுதல் (இன்று) தொடங்கும்’’ என்றார். போராட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம்பங்கேற்காது என அச்சங்க தலைவர் முகமது அலி தெரிவித்தார்.