Last Updated : 11 Sep, 2017 11:33 AM

 

Published : 11 Sep 2017 11:33 AM
Last Updated : 11 Sep 2017 11:33 AM

சோமனூர் பேருந்து நிலைய விபத்து விவகாரம்: ஆர்டிஐ ஆதாரங்களோடு சமூக ஆர்வலர்கள் புகார் - இன்று கடையடைப்பு நடத்த பொதுமக்கள் முடிவு

சோமனூர் பேருந்து நிலைய விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், விபத்துக்கு மழையே காரணம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கோவை கருமத்தம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சோமனூரில் கடந்த 7-ம் தேதி பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் பலியாகினர். 16 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும் சேதத்தை ஏற்படுத்திய இந்த விபத்துக்கு தொடர்மழையும், பராமரிப்பின்மையுமே காரணமாகக் கூறப்படுகிறது. அதிலும், பல முறை புகார் கொடுத்தும் கவனத்தில் கொள்ளாத அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர்.

விபத்து நடந்ததற்கு மறுநாளே அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவர்கள் மீது குற்ற வழக்கை பதிவு செய்யவும் வலியுறுத்தினர். இன்னும் சிலர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர். விபத்துக்கு விசாரணை நடத்த வலியுறுத்தி மக்கள் இயக்கங்களும் தொடங்க உள்ளன.

ஆனால், விபத்து நடந்து 4 நாட்களுக்கு மேலாகியும், அதற்கான காரணத்தை அறியமுடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளனர். விபத்து நடந்த நாளன்று பேரூராட்சி நிர்வாகத் தரப்பில் கேட்டபோது, ‘மேற்கூரையில் ஒருவேளை நீர் தேங்கியிருந்தால் கொசு மருந்து தெளிக்கலாம் என சமீபத்தில் ஏறிப் பார்த்தோம். அப்படி நீர் எதுவும் தேங்கவில்லை. கட்டுமானத்தில் ஏற்பட்ட பிரச்சினையே விபத்துக்கு காரணம்’ என்றனர். தற்போது முதல்கட்ட விசாரணை அறிக்கை அடிப்படையில், ‘மேற்கூரையில் மழை நீர் தேங்கியதே விபத்துக்கு காரணம்’ என அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதிகாரிகளின் இதுபோன்ற மாறுபட்ட பதில்களால் மக்களிடையே குழப்பம் நீடிக்கிறது. ஆனாலும் நடவடிக்கைகள் நீர்த்துப் போகக் கூடாது என்பதால், தங்களது கோரிக்கையை உறுதியாக முன்னெடுத்துச் செல்ல சமூக அமைப்புகள் தயாராகி வருகின்றன.

ஏர்முனை அமைப்பைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கூறும்போது, ‘விபத்து நடந்த இடத்தில் கிடைத்த கட்டுமானப் பொருட்களே, இது தரமற்ற கட்டுமானம் என்பதற்கு ஆதாரமாக இருந்தன. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். அதன் தொடர்ச்சியாக இன்று (செப்.11) இப்பகுதி முழுவதும் மக்கள் தன்னிச்சையாக கடையடைப்பு நடத்துகிறோம். எனவே மேலோட்டமாக இப்பிரச்சினையை அணுகாமல், காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.

ரூ.10 லட்சத்தில் பராமரிப்பு

கருமத்தம்பட்டி பேரூராட்சி நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தைச் சேர்ந்த இரா.சிவக்குமார் கூறும்போது, ‘விபத்துக்குள்ளான பேருந்து நிலையம், மோசமான நிலையில் இருக்கிறது என்பதை மக்கள் மட்டுமல்ல, கருமத்தம்பட்டியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை நிர்வாகமே சுட்டிக் காட்டியுள்ளது. 2007-ல் பேருந்து நிறுத்துமிடம் பழுதடைந்துள்ளதாக அவர்கள் கொடுத்த புகாரின்பேரில், புனரமைப்பு பணி நடந்தது. 2010 -11-ல் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த ஒருவர் பேரூராட்சியில் ஒப்பந்தம் எடுத்து, ரூ.10 லட்சம் செலவில் பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகளைச் செய்துள்ளார். அப்படி மேம்பாடு செய்யப்பட்ட கட்டிடம்தான் 5 பேரை பலி வாங்கியுள்ளதா? இதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. அதனால் தான் தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களுக்கு பேரூராட்சியில் பதில் கிடைப்பதில்லை. இந்த கட்டுமானத்தில் தொடர்புடைய அதிகாரிகள், ஊழியர்கள் அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம். போலீஸிலும் புகார் அளிக்க உள்ளோம்’ என்றார்.

‘மழையே காரணம்’

இக்குற்றச்சாட்டுகள் குறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கணேஷ்ராம் கூறும்போது, ‘சோமனூர் பேருந்து நிலையம் ரூ.30 லட்சம் செலவில் 1999-ல் தொடங்கி, 2003 மார்ச்சில் கட்டுமானம் முடிந்துள்ளது. மழை நீர் தேங்கியதாலேயே 170 அடி நீளமுள்ள மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது என்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சரியான காலகட்டங்களில் பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் யாருடைய தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே மேல் நடவடிக்கைக்கு வாய்ப்பில்லை. இனிமேல் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாத வகையில் கட்டுமானங்கள் இருக்கும்.

விபத்துக்குள்ளான பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் சென்று வர அனுமதி கொடுத்துள்ளோம். இடிந்த பகுதியைத் தவிர மற்ற பகுதிகள் பாதுகாப்பாக இருப்பதால் அதை அப்படியே தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இடிந்த பகுதியில் தனியே புதிய கான்கிரீட் மேற்கூரை விரைவில் அமைக்கப்படும். விபத்துகள் ஏதும் ஏற்படாதவகையில் கூடுதல் தூண்கள் அமைத்து இந்த தளம் அமைக்கப்படும். மாவட்ட ஆட்சியர், பேரூராட்சிகளுக்கான இயக்குநர் ஆகியோரின் ஒப்புதல்படி பணிகள் விரைவில் தொடங்கும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x