Published : 17 Mar 2023 06:08 AM
Last Updated : 17 Mar 2023 06:08 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் கழிவு நீருடன் குடிநீர் கலந்து வருவதால் நகர வாசிகள் அச்சமடைந்துள்ளனர். விருத்தாசலத்தின் பிரதான சாலையான ஜங்ஷன் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை சாலையின் இரு புறமும் கழிவு நீர் கால் வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு பள்ளம்தோண்டும் போது சில இடங்களில் குடிநீர் குழாய் உடைக்கப்பட்டுள்ளது. தேங்கி நிற்கும் கழிவுநீர் இந்த குடிநீருடன் கலந்துள்ளது. இதனால் இப்பகுதியினர் இந்த நீரை பயன்படுத்தாமல், நகராட்சிக்கு இதுபற்றி தகவல் அளித்துள்ளனர்.
விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க்அருகில் நெடுஞ்சாலை துறையின் சாலைப் பணி, மிகமிக மந்தமான நிலையில் ஏனோதானோ என்று நடந்து வருகிறது. பணிகள் தாமதத் தால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இதற்கிடையே பேருந்து நிலை யத்தில் உள்ள கழிவறையின் கழிவுநீர், செப்டிக் டேங்க் கழிவுநீர், பேருந்து நிலையத்தை ஒட்டி உள்ள விடுதிகளின் கழிவுநீர், முல்லைநகர் கழிவுநீர் உட்பட அப்பகுதியில் இருந்து வரக்கூடிய அனைத்து கழிவுநீரும், பழைய வடிகால் வழியே சேர்ந்து வருகிறது.
தற்சமயம், இங்கு தோண்டியுள்ள பள்ளத்திலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றத்திற்கு மத்தி யில் வர்த்தகம் செய்ய வேண்டியது உள்ளது என்று இப்பகுதி வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக விருத்தாசலம் 13-வது வார்டு கவுன்சிலர் கருணாநிதி கூறுகையில், “நெடுஞ்சாலைத்துறை செய்யும் தவறுக்கு நகராட்சி நிர்வாகம் பொறுப்பாக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் இதுபோன்று, சாலை அமைக்கிறேன் என்ற பெயரில் குடிநீர்குழாயில் உடைத்து சேதப்படுத்துவதால் அதில் கழிவுநீர் கலக்கிறது. நெடுஞ்சாலை துறை முறையாக இப்பணிகளைச் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
நகராட்சி குடியிருப்பு வாசிகளோ, “நாங்கள முறையாக தொழில் வரி, வணிக வரி, சொத்து வரி, குடிநீர் வரி என அனைத்து வரிகளையும் செலுத்துகிறோம். ஆனாலும் எங்களை சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாக்குகின்றனர்” என்று வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT